தந்தையை கொன்றது இந்திய இராணுவம்: பெண் ஒருவர் சாட்சி!

என் தந்தையை இந்திய இராணுவத்தினர் இந்தக் காணியில் வைத்தே அடித்துக் கொன்றனர் என மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவு நாவலடிச் சந்தியில் தமது வீடு, காணி என்பனவற்றை இழந்துள்ள காசிம்பாவா பர்ஸானா தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்

அந்தத் துயரம் மறைவதற்குள் இப்பொழுது இலங்கை இராணுவத்தினர் எமது இடத்தைக் கைப்பற்றி எம்மை அகதிகளாக்கியுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று மத்திய பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கொழும்பு, மட்டக்களப்பு. திருகோணமலைச் சந்தி நாவலடியில் படையினர் நிலைகொண்டுள்ள தமது குடியிருப்புக் காணிகளை மீட்டுத் தருமாறு கோரி அப்பகுதி காணியை இழந்த 16 முஸ்லிம் குடும்பங்களில் இந்த இளம் பெண்ணும் ஒருவராவர்.

இக்குடும்பங்கள் நேற்று நாவலடி படை முகாமுக்கு முன்னால் கொழும்பு மட்டக்களப்பு நெடுஞ்சாலை ஓரமாக கூடாரமிட்டு சத்தியாக்கிரகம் சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

”எனது தந்தையை இந்திய இராணுவமே அடித்து கொன்றது.தற்பொழுது எனது தாயாரும் இல்லை.நான் ஆதரவு இன்றி காணியுமின்றி இருப்பிடமில்லாது அகதியாக வாழ்ந்துக்கொண்டிருக்கின்றேன்….எனவே நாங்கள் வாழ்ந்த இடம் எப்படியாயினும் எங்களுக்கு திருப்பித்தர வேண்டும் என உருக்கத்ததோடு அந்த பெண் கூறினார்.”

இங்கிருந்து 1990 ஆம் ஆண்டு யுத்தத்தின் காரணமாக விரட்டியடிக்கப்பட்ட மக்கள் தாங்கள் ‘1968ஆம் ஆண்டு முதல் மேற்படி பிரதேசத்தில் குடியேறி வாழ்ந்து வந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். அவர்கள் அங்கு வாழ்ந்தமைக்கான அனைத்து ஆவணங்களையும் கொண்டிருப்பதாகவும் கூறுகின்றனர்.

Comments