ஊடகங்களுக்கு பதிலடி கொடுப்போம்!

சில ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

விமர்சிப்பவர்களை கடத்தாமல் தாக்காமல் பதிலுக்கு அவர்களை வார்த்தைகளால் விமர்சிப்பதில் எவ்வித தவறும் கிடையாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தில் நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சிற்கான நிதியொதுக்கீடு குறித்து, நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்விடயத்தைக் கூறியுள்ளார்.

பிரதமர் இதன்போது மேலும் தெரிவிக்கையில்-

”எம்மை சில ஊடக நிறுவனங்களும் ஊடகவியலாளர்களும் கடுமையாக விமர்சித்தபோதிலும் நாம் ஊடக அடக்குமுறையில் ஈடுபடவில்லை. அவர்களை கடத்தவோ, தாக்குதல் நடத்தவோ, தீ வைக்கவோ முயற்சிக்கவில்லை. ஊடக சுதந்திரத்திற்காக நான் மற்றவர்களை விட அதிகமாக குரல் கொடுத்துள்ளேன். அந்த வகையில் இவ்விடயம் தொடர்பாக பேசுவதற்கு ஏனையோரை விட எனக்கு அதிக உரிமையுண்டு.

ஊடகங்கள் எம்மை விமர்சித்தால் நாமும் விமர்சிக்க வேண்டும். ஊடகவியலாளர்களை கடத்திச் செல்லாமல் நாமும் பதிலுக்கு விமர்சிப்பதால் எந்தச் சிக்கலும் கிடையாது.

இராணுவத்தினரை பயன்படுத்தி கடத்துவதற்கோ, கொலைசெய்யவோ நாம் திட்டம் தீட்டவில்லை. இந்த நல்லாட்சியை நாம் அனைவரும் இணைந்தே உருவாக்கினோம். அதனைத் தாண்டி நாம் ஒருபோதும் செயற்பட மாட்டோம். ஆகவே ஊடக சுதந்திரம் குறித்து அஞ்சவேண்டாம் என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments