வடக்கு கிழக்கு இணைந்து தனிநாடாக உருவாகபோவதை தடுக்க முடியாது

புதிய அரசியலைமப்பில் தனி நாடொன்றுக்கு  தேவையான சகல அடிப்படை அம்சங்களுக்க வழங்கப்படவுள்ளன, எனவே   வடக்கு கிழக்கு இணைந்து தனிநாடாக உருவாகபோவதை தடுக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்,

அதேநேரம் 13 ஆவது திருத்தச்சட்டத்தில் ஏட்டிற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருந்த அதிகாரங்களை நடைமுறைப்படுத்தும் உரிமையும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்

தேசிய சுதந்திர முன்னணியின் தலைமை அலுவலகத்தில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்,

அவர் மேலும் தெரிவிக்கையில்,

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான  உப குழு அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது, இது தொடர்பில் நாம் பல முறை அறிவித்திருந்தோம், தற்போது இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது, அதற்காக ஜனவரி மாதத்தில் 3 நாட்கள்  பாராளுமன்றத்தில் விவாதம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது,

அதன் பின்னர் இறுதி வடிவ அரசியலமைப்பை நிறைவேற்றிக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது,   நாட்டின் பிரதான அரசியலைமப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் முன்பே நாட்டு மக்களிடம்  கருத்தறியப்பட வேண்டும் என்று கூறியே  அரசாங்கம் லால் விஜேநாயக்க தலைமையிலான குழுவை நியமித்தது,

ஆனால் அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் இந்த மக்கள் கருத்தறிவதே  சிறந்த முறையாகும், காரணம் மக்கள் தாம் எவ்வாறான சட்டதிட்டங்களின் கீழ் வாழப்போகின்றோம் என்பதை அறிந்து கொள்ள வேண்டியது மிக அவசியமானதாகும்,

அதேநேரம் இந்த அரசியலமைப்பு உருவாக்க குழுக்களில் அரசாங்கத்திற்கு சமீபமானவர்கேளே உள்ளனர்.  இந்த உப குழு அறிக்கையில் பிரதானமாக கைசாத்திட்டுள்ளவர் டி,சித்தார்த்தன், ஆனாலும் இந்த அரசியலமைப்பு  தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து ஜயம்பதி விக்கிரமரத்னவினாலேயே உருவாக்கப்படுகின்றது, ஜயம்பதியை தேசிய பட்டியலில் உள்ளீர்த்தன் பிரதான நோக்கமும் இதுவாகவே உள்ளது,

சந்திரிகாவின் காலத்தில் இதுபோன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட போதும் அதற்கு தலைமைத்துவம் வழங்கியவரும் இவர்தான்   என்பது சகலருக்கு தெரிந்த விடயம், இவர்களினால்   உருவாக்கபட்ட இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயங்களுக்கு கூட்டு எதிரணியில் இருக்கின்ற இருவர் எதிர்ப்பு தெரிவித்தாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைக்கு இணங்க யாப்பினை உருவாக்குவதில் இந்த அரசாங்கம் மும்முரமாக உள்ளது,

பாராளுமன்றத்தில் உள்ள மூன்றிலரண்டு பெரும்பான்மை பலத்தை கொண்டு இந்த அரசியலமைப்பை சூட்சமமாக நிறைவேற்றிக்கொள்வதே  அரசாங்கத்தின் நோக்கமாகும், எவ்வாறாயினும் அரசியலமைப்பு உப குழுவின் சாரத்தினை எடுத்துகொண்டால் நுணியில் அதிகாரத்தை குறைத்து  பரிதியில் அதிகாரத்தை வலுவாக்குங்கள் என்று கூறப்படுகின்றது,

அதாவது மாகாண சபை அதிகாரங்களில் விஸ்தரிப்புச் செய்யுங்கள் என்று கூறப்படுகின்றது, அதன் பிரகாரம் மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம், காணி அதிகாரம் மற்றும் முழுமையான நிதி கையாளுகை அதிகாரம் என்பவற்றினை வழங்குங்கள் என்று வலியுறுத்தப்படுகின்றது,  அத்துடன் ஒத்திசைவு பட்டியலும் நீக்கப்பட போகின்றது,

இதனால் மத்திய அரசுக்கும் மாகாண சபைகளுக்கும் உள்ள தொடர்பு   துண்டிக்கப்படும், அதற்கமைய புதிய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒரு நீதிமன்றம் உருவாக்கப்படவுள்ளது, அதற்கு அரசார்பற்ற நிறுவனங்களின் நீதிபதிகள் சிலரை அரசாங்கம் நியமிக்கும்.  , அங்கு இனங்களை பிரதிநிதித்துவப்படுத்திய நீதிபதிகள் அமர்த்தப்படுவர், இவர்களுக்கு ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட தீர்மானங்களை தவறானது என தீர்மானிக்கும் அதிகாரம்  வழங்கப்படும்,

அதேநேரம் அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவும் மாகாண சபைகளுக்கு வழங்கப்படுமாயின் தனியான ஒரு ஆட்சி  உருவாக இதனை விட  வேறு என்ன காரணங்கள் வேண்டும்?  தனியாட்சிக்காக அடிப்படை அங்கங்கள் சகலதையும் வடக்கு கிழக்கிற்கு வழங்குவதாகவே இது அமைந்திருக்கும்,

அத்துடன் ஜனவரி 8 ஆம் திகதி ஆட்சி மாற்றத்திற்கு உதவிய தமிழ் புலம்பெயர் அமைப்புக்களின் விருப்பத்தினை  பூர்த்தி செய்துகொள்வதற்கு சம்பந்தன் ரணில் கூட்டினால் உருவாக்கப்படும்  ஒரு சாசனமாகவே இந்த அரசியலமைப்ப உருவாகின்றது. ஆனால் நாட்டு மக்களிடத்தில் இந்த அரசியலமைப்பினால் ஜனநாயகம் வலுப்பெரும் என்பது உள்ளிட்ட அழகான வார்த்தைகளை முன்னிலை படுத்தி அரசாங்கம் பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றது,

இது பாராளுமன்றத்தினால் உருவாக்கப்படும் ஒரு அரசிலமைப்பாக வராது, ஆனால் பாராளுமன்றம் மட்டும் அரசியலமைப்புச் சபையாக மாற்றப்பட்டுள்ளது, இது தங்கையை காண்பித்து அக்காவை திருமணம் செய்துகொடுப்பது போன்றதாகும்,

இதற்கு வாக்களிக்க மக்கள் விடுதலை முன்னணியும் ஆர்வமாக உள்ளது, மக்கள் விடுதைல முன்னணியினர் எதற்காக போராட்டம் செய்தனர் என்பதையே இன்று அக்கட்சி மறந்துள்ளது.  மறுபுறத்தில்  இராணுவத்தினர் உயிர் தியாகம் செய்து பெற்றுக்கொண்ட நாட்டின் வடக்கு கிழக்கு பகுதிகளை மீண்டும் பெற்றுக்கொடுக்கவே அரசாங்க முயற்சிகின்றது,

எதிர்வரும் மார்ச் மாதம் அரசாங்கம் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் அமர்விற்கு முகம்கொடுக்கவுள்ளது.  அதன்போது அந்த சந்தர்ப்பத்தில் தமிழ் பிரிவினைவாத செயற்பாடுகளின் கோரிக்கைக்கு இணங்க நாங்கள் புதிய பிரிவினைவாத அரசியலமைப்பை உருவாக்கிவிட்டோம் என்பதை காண்பிக்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது,

எனவே அராசாங்கம் புதிய அரசியலைமைப்பின் ஜனவரி மாதத்தில் துரிதகதியில் நிறைவேற்கிக்கொள்ளும், அத்துடன் 13 ஆவது திருத்தச்சட்டத்தில் வழங்கப்பட்ட அதிகாரங்கள் இதுவரையில் ஏட்டில் மட்டுமே இருந்தன.   தற்போது அதனை நடைமுறைப்படுத்தவும்  தீர்மானிக்கப்பட்டுள்ளது,

எவ்வாறாயினும் இந்த அரசாங்கம் வடக்கு  கிழக்கினை  இணைத்து தனியொரு இராஜ்ச்சியத்தை உருவாக்கப்போவதை எவராலும் தடுக்க முடியாமல் போகும்.   எனவே   வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் இது தொடர்பில் மக்களை ஒன்று திரட்டிக்கொண்டு போராட்டம் நடத்துவோம், மாறாக மக்கள் இந்த பிளவை ஏற்படுத்த இடமளித்து விட்டு வேடிக்கை பார்ப்பதில் நியாயம் இல்லை என்றார்.

Comments