கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளராக மீண்டும் அகமட் லெப்பை நியமனம்

கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளராக மீண்டும் ஏ.எம். அகமட் லெப்பை கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளரினால் நியமிக்கப்பட்டு கடமைப் பொறுப்புக்களை ஏற்றுள்ளார்.

கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட நேர்முகப் பரீட்சையின் பிரகாரம் கடந்த 22.01.2016 ஆம் திகதி இவர் கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளராக நிமிக்கப்பட்டு கடமைப் பொறுப்புக்களை ஏற்றிருந்தார்.

எனினும் இலங்கை கல்வி நிருவாக சேவைக்காக புதிதாக வெளியிடப்பட்ட சேவை பிரமாணக் குறிப்பின் படி வலயக் கல்விப் பணிப்பாளர்களை நியமிக்கும் அதிகாரம் மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்குரியது. எனவே மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் கிண்ணியா வலயக் கல்விப்பணிப்பாளர் பதவிக்கு விண்ணப்பம் கோரியமை தவறு என்றும் இதற்கெதிராக கிழக்கு மாகாண இலங்கை கல்வி நிருவாக சேவையாளர் சங்கத்தினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் பதவிக்கு விண்ணப்பித்தோருக்கு நேர்முகப் பரீட்சைக்கு அழைப்பு விடுத்தது. இந் நேர்முகப்பரீட்சையை இடைநிறுத்துமாறு கோரும் மற்றுமொரு மனு கிழக்கு மாகாண கல்வி நிருவாக சேவையாளர் சங்கத்தினால் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை பரிசீலித்த நீதிமன்றம் இந்த நேர்முகப் பரீட்சைக்கு இடைக்கால தடை விதித்தது.

இருந்தும் கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் ஏ.எம். அகமட் லெப்பை கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். அவர் கடமைப் பொறுப்புக்களை ஏற்று கடமையாற்றிக் கொண்டிருக்கும் நிலையில் கடந்த 17.03.2016 ஆம் திகதி மேன் முறையீட்டு நீதிமன்றம் அவரது வலயக் கல்விப் பணிப்பாளர் பதவியை தற்காலிகமாக இடைநிறுத்தும் தடை உத்தரவை விதித்திருந்தது.

இந்நிலையில் கடந்த ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி மேன் முறையீட்டு நீதிமன்றம் இவரது வலயக் கல்விப் பணிப்பாளர் பதவிக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவை நீக்கியதை அடுத்து கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் 02.11.2016 ஆம் திகதி முதல் மீண்டும் கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளராக ஏ.எம். அகமட் லெப்பை நியமிக்கப்பட்டுள்ளார்.

ihzana fareed

Comments