பிரதமரின் ஆட்சியே நாட்டில் உள்ளதாம்!

நாட்டில் சட்டத்தின்  ஆட்சி  வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், பிரதமரின் ஆட்சியே இடம்பெறுகின்றதாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் செயலாளரும்  பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சோசலிச மக்கள் முன்னணி கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,

அத்துடன் மத்திய வங்கி திருட்டு குற்றச்சாட்டு தொடர்பில் அர்ஜுன் மஹேந்திரன் மற்றும் அவரது மருமகனுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்ய ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மத்திய வங்கி பிணைமுறிதொடர்பான குற்றத்துக்கு அர்ஜுன் மஹேந்திரன் மற்றும் அவரது மருமகனுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவேண்டும்.

ஜனாதிபதி இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் எதற்காக தாமதிக்கவேண்டும். அத்துடன் பாராளுமன்ற குழு இதுதொடர்பாக ஒரு முடிவுக்கு வந்துள்ளது.  இதுதொடர்பாக இன்னும் தாமதிக்கவேண்டியதில்லை.

அத்துடன் இந்தவிடயங்களை சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளதாக பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சட்டமா அதிபருக்கு இதற்கு முன்பும் இது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எதுவும் நடைபெறுவதில்லை. இந்த மத்திய வங்கி திருட்டு தொடர்பில் பிரதமர் பிரதான சந்தேகநபர்.

அவரிடம் விசாரணை நடத்தப்படவேண்டும் என கடந்த வருடம் பொலிஸ்மா அதிபருக்கு தெரிவித்திருந்தோம். இதுதொடர்பாக  சட்டமா அதிபரிடம் கருத்து வினவியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சட்டமா அதிபரிடம் இதுதொடர்பாக  நாம் எழுத்துமூலம் கேட்டிருந்தோம். ஆனால் இதுவரை பதில் இல்லை.

அதேபோன்று பாராளுமன்றத்தில் இதுதொடர்பாக கேள்வி கேட்டபோது அதற்கு பதில் அளிக்கவிடாமல் பிரதமர் இடை மறித்ததுடன் அதுதொடர்பாக சட்டமா அதிபருக்கு அனுப்பிவைத்துள்ளதாக தெரிவித்தார். அத்துடன் விளக்கம் தேவையாயின் கோப் குழுவிடம் கேட்டுக்கொள்ளுமாறு கூறினார்.

மத்திய வங்கி திருட்டுடன் பிரதமருக்கு தொடர்பிருப்பதால் இந்த விடயத்தை அவர் மறைத்துவருகின்றார். அதனால் பிரதமர் பதவியில் ரணில் விக்ரமசிங்க இருக்கும் வரைக்கும் அர்ஜுன் மஹேந்திரனுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. எடுக்கவும் விடமாட்டார்.

அத்துடன் கோப் அறிக்கை தொடர்பாக ஆராய்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுவினால் நியமிக்கப்பட்ட குழு அதன் அறிக்கையை ஜனாதிபதிக்கு சமர்ப்பித்துள்ளது.

ஆனால் அர்ஜுன் மஹேந்திரன் தொடர்பில் பொறுப்பு கூறவேண்டியது பிரதமர். அதனால் அர்ஜுன் மஹேந்திரனுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவிடாமல் பிரதமர் தடுத்துவருகின்றார்.

மேலும் அர்ஜுன் மஹேந்திரனை பிரதமர் ஆரம்பம் முதல் பாதுகாத்துவருகின்றார். ஆரம்பமாக 3பேர் அடங்கிய குழு அமைத்து அவர் குற்றமற்றவர் என பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தற்போது பொலிஸ்மா அதிபர், சட்டமா அதிபர் திணைக்களங்கள் அவரது கீழ் இருக்கின்றதால் இந்த இடங்களில் அர்ஜுன் மஹேந்திரனுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இடம்பெறுவதும் இல்லை.

இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றார் என்பதை மக்களுக்கு வெளிப்படுத்தவேண்டும். நாட்டின் சட்டாட்சி இன்று நிலைநாட்டப்படுவதில்லை.

சட்டாட்சி பிரதமரின் கீழ் இருக்கின்றது. பிரதமர் சட்டாட்சியின் மேல் அமர்ந்திருக்கின்றார். நாட்டில் பிரமதரின் ஆட்சியே இடம்பெறுகின்றது. பொலிஸ் திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம்  பிரதமரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி இதுதொடர்பாக தொடர்ந்தும் மெளனமாக இருப்பது முறையல்ல என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments