மூதாட்டியுடன் நபி (ஸல்) அவர்கள் பண்ணிய உண்மையான தமாஸ்
அல்லாஹ்வின் தூதரிடம் ஒரு மூதாட்டி வந்து அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விடம் அவன் என்னை சுவனத்தில் நுழைவிக்க பிரார்த்தனை செய்யுங்கள் என்றார். நபி (ஸல்) அவர்கள், இன்னாரின் தாயே என அழைத்து மூதாட்டிகள் (வயோதிபர்கள்) சுவனத்தில் நுழையமாட்டார்கள் எனக் கூறியதும் அப்பெண் அழுதவராக திரும்பினார். அவரிடம், சுவனத்தில் அம்மூதாட்டி (அவரது வயோதிக தோற்றத்தில்) நுழையமாட்டார் எனக் கூறிவிட்டு, அல்லாஹ் அல்குர்ஆனில் (சுவனவாதிகளான) அவர்களை நாம் புதுப்படைப்பாக்கி, கன்னியர்களாகவே ஆக்கியுள்ளோம் என்ற அல்வாகிஆ அத்தியாத்தில் இடம் பெறும் வசனத்தை ஓதிக் காண்பித்தார்கள்.
சுவனத்தில் நுழைவோரின் வயதெல்லை முப்பத்தி மூன்று என்று திர்மிதி, அஹ்மத் ஆகிய கிரந்தங்களில் இடம் பெற்றுள்ளது. சுவனத்தில் நுழைவோர் முப்பத்தி மூன்று வயதை உடையவர்களாகவும், (முறுக்கேறிய) இளைஞர்களாகவும், மேனியில் முடி அற்றவர்களாகவும், தாடி முளைக்காதவர்களாகவும் இருப்பார்கள் (திர்மிதி, அஹ்மத்)
ஆதமின் நபியின் உயர்த்தை உடையவர்களாக சுவனவாதிகள் இருப்பார்கள் என்று புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட ஹதீஸ்கள் குறிப்பிடுகின்றன. ஆதமின் உயரம் பற்றி செய்தி விபரமாக முன்னர் தரப்பட்டுள்ளது.
நரகத்தில் இருந்து தப்பினேன் பிழைத்தேன் என்ற நிலையில் காணப்படும் ஒரு சுவனவாதி
சுவனத்தில் இறுதியாக நுழைந்த சுவனவாதிகளில் ஒருவர் நரகத்தை பார்த்து தப்பினேன் பிழைத்தேன் என்பதைப் பிரதிபலிப்பார். அது பற்றி நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்.
சுவனத்தில் இறுதியாக நுழையும் ஒரு மனிதன் அவன், -ஸிராத்- பாலத்தைக் கடந்து செல்லும் வேளை ஒரு தடவை நடந்தும், மற்றொரு தடவை தவழ்ந்தும் செல்லுவான். (வழியில்) நரகத்தின் தீச்சுவாலை அவனை சில போது தீண்டிவிடும். அவன் அந்தப் பாலத்தைக் கடந்ததும் நரகின் பக்கமாக திரும்பிப் பார்த்து
تَبَارَكَ الَّذِي نَجَّانِي مِنْكِ لَقَدْ أَعْطَانِي اللَّهُ شَيْئًا مَا أَعْطَاهُ أَحَدًا مِنْ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ
உன்னில் இருந்தும் என்னைப் பாதுகாத்தானே அவன் (அல்லாஹ்) மகத்துவம் நிறைந்தவன், அவன் முதல், மற்றும் இறுதியாக வந்தவர்கள் எவருக்கும் வழங்காத (பல வெகுமதிகளை) எனக்கு அவன் வழங்கியுள்ளான் எனக் கூறுவான். (முஸ்லிம்).
சுவனவாதி பற்றிய மற்றொரு செய்தியின் தொடரில் ….. ‘அப்போது அவன் முன்பாக (சுவனத்து) மரம் ஒன்று உயர்த்தப்படும், எனது இரட்சகனே! அதன் நிழலில் நிழல் பெறவும், அதன் கீழ் ஓடும் நீரைப்பருகவும் என்னை இந்த மரத்தின் பக்கம் நெருக்கி வைப்பாயாக என வேண்டுவான். ஆதமின் மகனே! நான் இதை உனக்கு வழங்கினால் வேறு எதையும் நீ என்னிடம் கேட்பாயா என அல்லாஹ் கேட்பான். அவன் இல்லை எனது இரட்சகனே! நான் அதைத் தவிர வேறு எதையும் கேட்கமாட்டேன் என வாக்குறுதி செய்ததும் அல்லாஹ் அதை வழங்குவான். பின்னும் அதைவிட அழகான மரம் ஒன்று கொடுக்கப்படுவான். பின்னும் அவன் அதில் ஆசை வைத்து அதன் நீரை அருந்திட, நிழல் பெற மீண்டும் கேட்பான், அல்லாஹ் அவனிடம் ஆரம்ப வாக்குறுதியை நினைவுபடுத்திக் கூறும்போது இதன் பின் எதையும் கேட்கமாட்டேன் எனக் கூறுவான். அந்த மரத்தில் இருந்து ஆரம்பமாகி கொஞ்சம் கொஞ்சமாக அவன் சுவனவாசல்வரை நெருக்கப்படுவான். ….. என்ற நீண்ட ஹதீஸின் தொடரில் மற்றொரு சுவாரஸ்யத்தைக் கேழுங்கள்.
அப்போது அவன் சுவனவாதிகளின் சப்தத்தை செவிமடுப்பான். எனது இரட்சகனே! என்னை அதில் நுழைவிப்பாயாக! எனக் கூறுவான். ஆதமின் மகனே நான் உனக்கு உலகையும், அதை போன்றதொரு மடங்கும் தருவேன். அதைக் கொண்டு நீ பொருந்திக் கொள்வாயா எனக் கேட்பான்,
قَالَ يَا رَبِّ أَتَسْتَهْزِئُ مِنِّي وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ
அப்போது அந்த சுவனவாதி, நீ அகிலங்களின் அதிபதியாக இருந்து கொண்டு என்னைப் பரிகாசம் செய்கின்றாயா? எனக் கேட்பான் எனக் கூறிய இந்த ஹதீஸ் அறிவிப்பாளரான இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் சிரித்தார்கள். இதை செவிமடுத்தோர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறே சிரித்தார்கள் எனக் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் என்ன அடிப்படையில் சிரித்தார்கள் எனக் கேட்டபோது அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ்வின் சிரிப்பின் மூலம் எனக் கூறினார்கள். (முஸ்லிம்)


Comments
Post a Comment