தங்களது காணியை தரும்வரை உண்ணாவிரதப் போராட்டம்.





மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி நாவலடி இராணுவ முகாம் அமைந்துள்ள காணியை மீளப் பெற்றுத்தருமாறு கோரி பாதிக்கப்பட்ட மக்கள் இன்று (புதன்கிழமை) மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் நாவலடி இராணுவ முகாமுக்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



இதன்போது 1990ம் ஆண்டு இடம்பெயர்ந்து இதுவரை காணி கிடைக்கவில்லை வசித்த காணியை மீளத் தாருங்கள், இக்காணி எமக்குள்ள ஒரேயொரு வளம் இதை எமக்கு வழங்கு, எங்களது காணி கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம், எல்.எல்.ஆர்.சி விசாரணை முடிவை வெளிப்படுத்து, அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு 4 ஏக்கர் போதுமானது மிகுதி காணியை பகிர்ந்தளி, கட்டளையிடும் அதிகாரி லால் பெரேரா அவர்களினால் மீட்டு வழங்கப்பட்ட காணி மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது அதை இப்போது எமக்கு வழங்கு என போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு கலந்து கொண்டனர்.



1968ம் ஆண்டு தொடக்கம் ஓட்டமாவடி நாவலடி பிரதேசத்தில் குடியேறி வாழ்ந்து வந்த மக்கள் நாட்டில் ஏற்பட்ட அசாதார சூழ்நிலை காரணமாக 1990ம் ஆண்டு தங்களது இருப்பிடங்களை விட்டு இடம் பெயர்ந்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் வசித்து வருகின்றனர்.



1990ம் ஆண்டு தொடக்கம் இவர்களது காணியில் இராணுவம் முகாம் அமைத்துள்ளதால் தங்களது காணிகளை விடுவிப்பதோடு எங்களுக்கான நஸ்ட ஈட்டினையும் பெற்றுத்தந்து எங்களை மீள் குடியேற்றம் செய்யுமாறு பாதிக்கப்பட்ட மக்கள் அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளிடமும் சென்றும் எந்தவித பலனும் கிடைக்காத சந்தர்ப்பத்தில் இன்று உண்னாவிரத போராட்டத்தில் குதித்துள்ளனர்.



இராணுவ முகாம் அமைந்துள்ள பிரதேசத்தில் பதின் எட்டு பேரினது காணிகள் உள்ளடக்கப்பட்டுள்ள போதிலும் பிரதேச செயலகத்தினால் இரண்டு பேருக்கு மாற்றுக் காணிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மீதமாகவுள்ள பதினாறு பேருக்கு காணிகளை மீட்டுத்தருமாறும் உண்னாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.



உண்னாவிரத இடத்திற்கு வருகை தந்த கிழக்கு மாகாண முதலமைச்சரின் பிரத்தியோக செயலாளர் அன்வர் நௌஸாத் மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் ஆகியோரிடம் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கான மகஜரினை கையளித்தனர்.



எங்களுக்கான காணி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.



இச் சம்பவம் தொடர்பாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜூத்திடம் வினவிய போது.



இராணுவ முகாம் அமைந்துள்ள இடத்தில் குடியிருந்த மக்களுக்கான காணி வழங்குவது தொடர்பாக மீள் குடியேற்ற அமைச்சு மற்றும் தனது மேலதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் இராணுவம் குறிப்பிட்ட காணியை விடுவிக்கும் பட்சத்தில் அவர்களுக்குரிய காணிகள் கையளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.





Comments