தான் இனவாதியோ மதவாதியோ அல்ல என்கிறார் சுமனரத் தேரர்!

வெளிநாட்டில் உள்ளவர்கள் புலிக் கொடி ஏந்தியவாறு தன்னை கொலை செய்யப் போவதாக அச்சுறுத்தி வருகின்றனர் என மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி சுமனரத்த தேரர் ஆக்ரோஷகமாகத் தெரிவித்துள்ளார்.

கிராமசேவகரின் ஊடாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள ஆறு சிங்கள குடும்பங்களுக்கு நீதியை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி மட்டு அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் மகஜர் ஒன்றை கையளித்து விளக்கமளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு ஆவேசமடைந்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,

யுத்த காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கி அவர்களின் காயத்திற்கு மருந்திட்ட என்னை புலி பயங்கராவதி என கூறி எனக்கெதிராக அக்காலப்பகுதியில் தேரரொருவரே வழக்குத்தாக்கல் செய்தார்.

அதேபோல தற்போது என்னுடைய மக்களின் பிரச்சினைகளுக்காக போராடும் என்னை இனவாதி என மக்களிடம் பொய்கதைகளை சித்தரித்து வருகின்றனர்.

இதன் காரணமாக வெளிநாட்டில் உள்ளவர்களிடமிருந்து எனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்றது.

எனது மக்களுக்காக நான் இறப்பதற்கும் தயாராக உள்ளேன். இவ்வாறான செயற்பாடுகளுக்கு அஞ்சியவன் நானல்ல.

நான் இனவாதியோ மதவாதியோ அல்ல. தமிழ் மக்களுக்கு எதிரானவனும் அல்ல. சிங்கள மக்களின் உரிமைகளுகாகவே போராடுகிறேன் இதனை அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டும்.

நியாயம் பெற்றுக் கொடுக்க நினைத்ததினாலேயே நான் இன்று உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றேன்.

தங்களை நான் அச்சுறுத்தவில்லை. மாறாக கோரிக்கையாகவே முன்வைக்கின்றேன். இப்பகுதியில் தமிழ், முஸ்லிம் அதிகாரிகளே அரச சேவையில் உள்ளனர்.

சிங்கள அரச அதிகாரிகள் இல்லை என்பதால் எம்மக்களுக்கும் பாரபட்சம் இன்றி நீங்கள் உதவ வேண்டும்.

இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை இந்த அப்பாவி மக்களுக்கு எதிராக யாரும் செயற்பட வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments