ஆவா குழு சந்தேகநபர்கள் 11 பேர் பிணையில் விடுவிப்பு!

வடக்கில் செயற்பட்ட ஆவா குழு உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 11 பேர் நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் அருணி ஆட்டிக்கலவினால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சந்தேக நபர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளைச் சுமத்தப் போவதில்லை என்று பயங்கரவாத தடுப்புப் பிரிவினால்,  நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கமைய, பணச்சலவை சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்றும் நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தப்பட்டது.
11 சந்தேக நபர்களையும், ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு பேரின் பிணையில் செல்வதற்கு நீதிவான் அனுமதி அளித்துள்ளார்.
சந்தேகநபர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்குத் தடை விதித்த நீதிவான், ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை, யாழ்ப்பாணத்தில் உள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவில் முன்னிலையாக வேண்டும் என்றும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

Comments