Skip to main content
இன மோதல்களை ஏற்படுத்த முனையும் தேரரை கைது செய்யாது அழைத்துப் பேசுவதானது வெட்கத்திற்கும் வேதனைக்குமுரியது
பாராளுமன்றில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்
முஸ்லிம் சிங்கள மோதல்களை ஏற்படுத்துவதற்கு முனைந்து கொண்டிருக்கும் பௌத்த தேரரை கைது செய்யாது அழைத்துப் பேசுவதானது வெட்கமானதும் வேதனையானதுமான செயலாகும் என அமைச்சர் ரிசாத் பதியுதீன் சபையில் தெரிவித்தார்.
இந்த நாட்டில் இரண்டு சட்டங்கள் காணப்படுகின்றதா எனக் கேள்வியெழுப்பிய அமைச்சர் ரிசாத், தெஹிவளை பள்ளிவாசல் கட்டடம் இடிக்கப்படுமென விடுத்துள்ள அறிவிப்பு அரசியலமைப்பை மீறும் செயல் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை புத்தசாசன அமைச்சு சுற்றுலாத்துறை அபிவிருத்தி கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சு, தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றின் செலவுத் தலைப்புகள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
தெஹிவளை பள்ளிவாசல் விடயம் தொடர்ந்தும் பிரச்சினையாகவே காணப்படுகின்றது. கடந்த நவம்பர் மாதம் 17ஆம் திகதி நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இந்தக் கட்டடம் சட்டவிரோதமானது என்றும் நிர்மாணப்பணிகள் இடம்பெற்றால் உடைப்போம் என எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தெஹிவளை பள்ளிவாசலும் மத்ரஸாவாக ஆரம்பிக்கப்பட்டு சகல அனுமதிகளும் பெற்றே நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறிருக்கையில் எவ்வாறு இந் நகர அபிவிருத்தி அதிகாரசபை இவ்வாறான கடிதமொன்றை அனுப்ப முடியும். இரண்டு முஸ்லிம்கள் சேர்ந்து வாழ்ந்தால் ஒன்று சேர்ந்து ஐவேளை தொழுகை செய்ய வேண்டுமென குர்ஆன் கூறுகின்றது.
அவ்வாறிருக்கையில் 345 குடும்பங்கள் வாழும் இப்பகுதியில் பள்ளிவாசல் ஒன்று இருக்கக் கூடாது என -இவ்வாறு அச்சுறுத்தல் கடிதம் அனுப்புவதானது அரசியல் அமைப்பை மீறும் செயலாகும்.
அதேநேரம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்திரிக்கின்றார்கள். மத்ரஸாக்களை தவறான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் இடமாக கூறுகின்றனர். அது மிகமிக தவறானதாகும்.
இந்நாட்டில் முஸ்லிம்கள் எவரும் ஆயுதங்களை ஏந்துவதை-விரும்பவில்லை. மத்ரஸாக்களில் உள்நாட்டில் உள்ளவர்களாலோ வெளிநாட்டிலுள்ளவர்களாலோ எந்தவிதமான பயங்கரவாதச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை என்பதை நான் பொறுப்புடன் கூறுகின்றேன்.
முஸ்லிம்கள் மீதான சந்தேகத்தைக் கைவிடுங்கள். அதேநேரம் குர்ஆன் மீதும் நபிகள் மீதும் அவதூறான கருத்தை வெளியிட்ட பௌத்த தேரரை கைது செய்ய வேண்டுமென நான் பொலிஸாரிடத்தில் முறைப்பாடு செய்துள்ளேன். அவருடைய கூற்று இந்நாட்டில் உள்ள முஸ்லிம்களை மட்டுமல்ல உலகத்திலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் வெகுவாக பாதித்திருக்கும்.
அதேபோன்றுதான் அண்மைக்காலமாக மட்டக்களப்பில் பௌத்த தேரர் ஒருவர் கடும் போக்குடன் செயற்படுகின்றார்.
தமிழ் முஸ்லிம் சகோதரர்களை திட்டுகிறார். இவ்வாறு தமிழ், முஸ்லிம் சமூகங்களின் மீது கடும் போக்குடன் செயற்படும் பௌத்த தேரர்கள் மீது கூட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சிங்கள, முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் மோதல்களை ஏற்படுத்த முயலும் கடும் போக்கான தேரர்களை கைது செய்வதற்கு பதிலாக அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதானது மிகவும் வெட்கத்துக்குரியதும் வேதனையானதுமான விடயமாகும்.
அவ்வாறான செயற்பாட்டை பார்க்கும் போது இந்த நாட்டில் இரண்டு சட்டங்கள் இருக்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது. சட்டம் என்பது ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். அது பாரபட்சமின்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றார்.
Comments
Post a Comment