Skip to main content

.முல்லைத்தீவில் பரீட்சைக்கு தோற்றிய முஸ்லீம் மாணவிகள்,ஃபர்தா அணியக்கூடாது என கூறியதால் சர்ச்சை!.


..

முல்லைத்தீவு மாவட்டத்தில் கல்விப்பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய முஸ்லீம் மாணவிகளுக்கு ஃபர்தா அணியக் கூடாது என பரீட்சை மேற்பார்வையாளர்கள் ஏனைய அதிகாரிகள் பணித்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படடுள்ளது.
பரீட்சை மத்திய நிலையமாக செயற்படும் தண்ணீறூற்று முஸ்லீம் மகா வித்தியாலத்தில் பரீட்சைக்கு தோற்றிய மாணவிகளே இந்த நிலைமையை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபர்தாவை அகற்ற மறுத்தால் சுட்டெண்களை பரீட்சை திணைக்களத்திற்கு அனுப்பி, பரீட்சை பெறுபேறுகளை வெளிவராமல் தடுப்போம் என பரீட்சை மேற்பார்வையாளர்கள் மாணவிகளை எச்சரித்ததாக மாணவிகளும் குறித்த பாடசாலையின் பழைய மாணவர் ஒருவரும் தெரிவித்தனர்.
இந்த நடவடிக்கையானது மாணவிகளின் பரீட்சையை பாதித்துள்ளதாகவும் உளரீதியான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இது தொடர்பாக தாம் வலயக்கல்வி பணிமனையுடன் முறையிட்டவேளை பரீட்சைக்கு தோற்றும் பரீட்சாத்தி ஒருவரின் காதுகள் தெரியும் படி இருக்கவேண்டும் என பரீட்சை திணைக்களத்தின் புதிய சுற்று நிருபத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் தவிர உடையை அகற்றவேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவித்ததோடு இந்த அறிவுறுத்தல் தொடர்பாக பாடசாலை அதிபர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் ஒன்று வலய கல்வி திணைக்களத்தால் நடாத்தப்பட்டதாகவும் இதில் குறித்த பாடசாலையின் சார்பில் எவரும் கலந்து கொள்ளவில்லை எனவும் இதனால் இந்த நிலை ஏற்பட்டிருப்பதாகவும் வலயக்கல்வி பணிமனை அதிகாரிகள் தெரிவித்ததாக குறித்த பாடசாலையின் பழைய மாணவர் சங்க தலைவர் தெரிவித்தார்.
இருந்த போதிலும் நேற்று குறித்த பாடசாலையில் பரீட்சையின்போது பரீட்சை மேற்ப்பார்வையாளரான குறித்த அதிகாரி மாணவிகளை உடனடியாக ஃபர்தாவை அகற்றினால்தான் பரீட்சைக்கு தோற்றமுடியும் என்று கூறியதோடு இனிவரும் நாட்களில் தாவணி ஒன்றினை அணிந்துவருமாறும் பணித்துள்ளார்.
இதனால் மாணவிகள் சங்கடங்களுக்கு உள்ளானதாகவும் ஃபர்தாவை அகற்றிய பின்பே பரீட்சை எழுதியதாகவும் இதனால் மாணவிகள் பரீட்சை எழுதுவதில் குழப்பங்களை எதிர்கொண்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
குறித்த அதிகாரியின் செயல் பரீட்சைதிணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு முரணானவகையில் அமைத்திருப்பதாகவும் இது குறித்து பரீட்சை நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி உட்பட, வலய கல்வி பணிமனையின் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது..

Comments