விபசார விடுதி தொடர்பான குற்றச்சாட்டில் மட்டு.முன்னாள் மேயர் உட்பட நால்வருக்கு பிணை

மட்டக்களப்பு நகரிலுள்ள கட்டிடமொன்றில் முன்னெடுக்கப்பட்டுவந்த விபசார விடுதி தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு மாநகர முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் உட்பட நான்கு சந்தேக நபர்களுக்கும் நிபந்தனைகளின் பேரில் இன்று நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மட்டக்களப்பு மாநகர முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் உட்பட நான்கு சந்தேக நபர்களையும் பொலிஸார் ஆஜர்படுத்திய போது நீதிபதி எம். கணேசராஜா பிணையில் செல்ல அனுமதி வழங்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.
தலா ரூபா 20 ஆயிரம் ரொக்கப் பிணையிலும் ரூபா 2 இலட்சம் பெறுமதியான இருவரின் சரீரப் பிணையிலும் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதேவேளை, பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி கையொப்பமிடுமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளதுடன் எதிர்வரும் 5 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி எம். கணேசராஜா உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments