மெளலவி ஆசிரியர்கள் நியமனம் துரிதப்படுமா?

நீண்ட காலமாக நிரப்பப்படாதுள்ள மெளலவி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் பரவலான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் என்பன இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளன.

அர­சாங்கப் பாட­சா­லை­களில் நிலவும் 1000 க்கும் மேற்­பட்ட இஸ்லாம் மற்றும் அரபு மொழி போதிக்கும் மௌலவி ஆசி­ரியர் வெற்­றி­டங்­களை காலம் தாழ்த்­தாது நிரப்­பு­மாறு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை கல்வி அமைச்சர் அகி­ல­விராஜ் காரி­ய­வ­சத்­திடம் வேண்­டுகோள் விடுத்­துள்­ளது. 

இறு­தி­யாக 2010 ஆம் ஆண்டு மௌலவி ஆசி­ரியர் நிய­ம­னங்கள் வழங்­கப்­பட்­ட­தா­கவும் அப்­போது 635 மௌலவி ஆசி­ரியர் வெற்­றி­டங்கள் நாட­ளா­விய ரீதியில் நிரப்­பப்­பட வேண்­டி­யி­ருந்த நிலையில் 150 நிய­ம­னங்கள் மாத்­தி­ரமே வழங்­கப்­பட்­ட­தா­கவும் உலமா சபை கல்வி அமைச்­ச­ருக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் குறிப்­பிட்­டுள்­ளது.

இதேேவளை அண்மையில் பதுளையில் நடைபெற்ற தேசிய மீலாத் விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மெளலவி ஆசிரியர் நியமனங்களை 2017 இறுதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.

இருப்பினும் குறித்த காலப்பகுதிக்கு முன்னர் காலம் தாழ்த்­தாது அந்­நி­ய­ம­னங்­களை வழங்­கு­மாறு கல்வி அமைச்­ச­ரையும் ஜனா­தி­ப­தி­யையும் கோர­வுள்­ள­தாக முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால், தபால்­துறை அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரி­வித்துள்ளார்.

" அர­சாங்கப் பாட­சா­லை­களில் நிலவும் 1000 க்கும் மேற்­பட்ட மௌலவி ஆசி­ரியர் வெற்­றி­டங்கள் தொடர்பில் பல தரப்­பி­னரால் என்னிடம் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

2010 ஆம் ஆண்டு 635 மௌலவி ஆசி­ரியர் வெற்­றி­டங்கள் இருந்த போதும் 150 நிய­ம­னங்கள் மாத்­தி­ரமே வழங்­கப்­பட்­டுள்­ளன. மாண­வர்­களை நல்­வ­ழிப்­ப­டுத்­து­வ­தற்கு சமயம் போதிக்­கப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

இஸ்­லாமும் அரபும் அதில் தேர்ச்சி பெற்­றுள்ள மௌல­வி­க­ளி­னாலேயே போதிக்­கப்­பட வேண்டும்.  இந்­நி­லையில் அடுத்த வாரம் இடம்­பெ­ற­வுள்ள ஜனா­தி­ப­தி­யு­ட­னான சந்­திப்பில் இந்­நி­ய­மனம்  தொடர்பில் தெளி­வு­ப­டுத்­த­வுள்ளேன்.

கல்வி அமைச்­ச­ரூ­டாக இந்­நி­ய­ம­னங்­களைத் துரி­தப்­ப­டு­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்" என்றும் அமைச்சர் ஹலீம் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டிலுள்ள முஸ்லிம் பாடசாலைகளில் மாத்திரமன்றி தமிழ் , சிங்கள பாடசாலைகளிலும் இஸ்லாம் பாடத்தை போதிப்பதற்கான தகைமை வாய்ந்த ஆசிரியர்களுக்கு பெரும் பற்றாக்குறை நிலவுகிறது.

இதன்காரணமாக பல பாடசாலைகளில் முஸ்லிமல்லாத ஆசிரியர்கள் இஸ்லாம் பாடத்தை போதிக்கின்ற துரதிஷ்டமான நிலைமைகளும் தோற்றம் பெற்றுள்ளன.

எனவேதான் அரசாங்கம் மெளலவி ஆசிரியர் நியமனத்தை துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பது காலத்தின் தேவையாகும்.

இதனை வென்றெடுப்பதில் சகல முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.

Comments