கட்சியின் செயலாளர் தொடர்பில் இன்று அறிவிக்கப்போவதில்லை.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் யார் என்பது பற்றி தேர்தல் ஆணைக்குழுவுக்கு இன்று அறிவிக்கப்போவ தில்லை. அவ்வாறு அறிவிக்குமாறும் தேர்தல்கள் ஆணைக் குழு கோரவுமில்லை. எனினும் கட்சியின் செயலாளர் நாயகம் தொடர்பில் சில தெளிவுகளையே ஆணைக்குழு கட்சியிடம் கோரியுள்ளது. எனவே அது தொடர்பில் ஆணைக்குழுவை இன்று தெளிவுபடுத்தவுள்ளளோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீடக்கூட்டம் நேற்று மாலை 6.15 முதல் இரவு 9.45 மணி வரை கட்சியின் உயர்பீடமான தாருஸ்ஸலாத்தில் நடைபெற்றது. கட்சியின் செயலாளர் விடயம் தொடர்பில் காரசாரமான வாதப்பிரதிவாதங்கள் அதன்போது இடம்பெற்றன. இருந்தபோதிலும் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹஸனலி குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கவில்லை. உயர்பீடக்கூட்டம் நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

கட்சியின் செயலாளர் நாயகம் ஹஸனலியை இன்று சந்திப்பதற்கு நான் தயாராக உள்ளேன். எனவே அவர் என்னைச் சந்தித்து செயலாளர் விடயம் தொடர்பில் கலந்தாலோசிக்கலாம். அவருடனான சந்திப்பின் பின்னரே அவர் சம்பந்தமான விடயம் தொடர்பில் தீர்மானம் ஒன்றுக்கு வரமுடியம். எனினும் கடந்த பேராளர் மாநாட்டின்போது கொண்டு வரப்பட்ட யாப்பு திருத்தத்தின் மூலமே உயர்பீடச் செயலாளர் அறிமுக்கப்படுத்தப்பட்டார். ஆகவே அப்போது கொண்டு வரப்பட்ட யாப்புத் திருத்தம் உரிய முறையிலேயே நிறைவேற்றப்பட்டுள்ளதாக உயர் பீடக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். எனவே செயலாளர் விடயத்தில் மாற்றம் எதனையும் கொண்டு வருவதாயின் அது பேராளர் மாநாட்டிலேயே நிறைவேற்றப்பட வேண்டும். யாப்புத் திருத்தத்தின் மூலமே அதனை கொண்டுவர வேண்டியள்ளது.

எனவே கட்சியின் யாப்புக்கு இணங்க தீர்வுகளை ஆராய்வதற்கு கட்சி தயார். ஆகவே கட்சியின் உச்சபீடம் எதிர்வரும் இரண்டாம் திகதி கூடி திருத்தங்கள் தொடர்பிலும் பேராளர் மாநாடு தொடர்பிலும் ஆராயவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Comments