Skip to main content
மத அனுஷ்டானங்களின் பெயரில் இனவாதத்தை தூண்டக்கூடாது!

மத அனுஷ்டானம் என்ற பெயரில் வடக்கு கிழக்கில் வாழும் மக்களை பழிவாங்குவதையோ அல்லது இனவாதத்தை தூண்டும் நடவடிக்கைகளையோ மேற்கொள்ளக்கூடாதென பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
தெற்கிலுள்ளவர்களுக்கு வடக்கு கிழக்கிலும், வடக்கு கிழக்கில் உள்ளவர்களுக்கு தெற்கிலும் மத அனுஷ்டானங்கள் மற்றும் சுற்றுலா நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான சூழல் உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில், இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ள கூடாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுபல சேனா உள்ளிட்ட சில பேரினவாத அமைப்புகள் அண்மையில் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் நடத்த மேற்கொண்டிருந்த முயற்சி தொடர்பில், ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
சகலருக்கும் சகல பிரதேசங்களுக்கும் செல்லும் உரிமை உண்டு என்கின்ற போதிலும், சில பௌத்த அமைப்புக்களின் செயற்பாடு தவறானதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஒரு சில அமைப்புக்களால் ஏற்படுத்தப்படும் இவ்வாறான செயற்பாடுகளை கண்டு மக்கள் அச்சமடைய தேவையில்லையென குறிப்பிட்டுள்ள பாதுகாப்புச் செயலர், எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தேசியக் கொடியென குறிப்பிட்டு மட்டக்களப்பில் ஏந்திச் செல்லப்பட்ட பௌத்த மதத்தை மட்டும் சுட்டிக்காட்டும் கொடி பயன்பாடு தொடர்பாக, பொலிஸார் நடவடிக்கை எடுப்பர் என பாதுகாப்புச் செயலர் மேலும் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment