நெற் பயிர் செய்கை விவசாயிகளுக்கு ஒரு நற்செய்தி!

தற்போது செய்கை பண்ணப்பட்டுள்ள நெற் பயிர் செய்கைக்கான உரமானிய கொடுப்பனவுகளை விவசாயிகள் தாங்கள் சமர்ப்பித்த வங்கிக் கணக்கில் பெற்றுக் கொள்ள முடியும் என கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளர் ஆர்.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் 45 ஆயிரத்து 683 ஏக்கர் நிலப்பரப்பில் செய்கை பண்ணுவதற்காக 17 ஆயிரத்து 551 விவசாயிகள் கமநல அபிவிருத்தி திணைக்களத்தில் பதிவு செய்திருந்தனர்.

இவர்களுக்கான உரக்கொடுப்பனவுக்காக ஏக்கர் ஒன்றுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வீதம் 226.8 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

அக் கொடுப்பனவுக்கான வேலைகள் எமது திணைக்களத்தில் நிறைவு செய்யப்பட்டு மத்திய விவசாய அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கான உரமானியக் கொடுப்பனவுகள் அவர்களது வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனவே விவசாயிகள் இன்று முதல் அவற்றை பெறமுடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, முதல்கட்டமாக உரமானியக் கொடுப்பனவுகள் வடக்கில் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் கிழக்கில் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களுக்குரிய விவசாயிகளின் கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன் ஏனைய மாவட்ட உரமானியக் கொடுப்பனவுகளுக்கான வேலைகள் இடம்பெற்று வருகின்றன.

Comments