குடிபோதையில் முஸ்லிம்களை தாக்கிய இருவருக்கு விளக்கமறியல்

தீகவாபியில் கடந்த 02ம் திகதி முஸ்லிம்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் இரு சிங்களவர்கள் தமண பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் இன்று (14) ஆஜர்செய்யப்பட்டனர்.


கைது செய்யப்பட்ட தீகாவபியை சேர்ந்த இருவரையும் எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி நளினி கந்தசாமி உத்தரவிட்டார்.


பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சட்டத்தரணிகளான எம்.எம்.பஹிஜ், யூ.எல்.வசிம் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
கைது செய்யப்பட்ட இந்நபர்கள் வீதியால் சென்றவர்களை மறித்து மது போதையில் தாக்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தனர்.


கைது செய்யப்பட்ட இருவரும் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த இறக்காம பிரதேசத்தைச் சேர்ந்த தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவன் இம்ரான் , அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் அஸ்மி ஏ கபூர் உட்பட வீதியால் பயணித்த பலரை தாக்கியதுடன் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளையும் தாக்கி உடைத்தனர்.


இத்தாக்குதல் சம்பவத்தின் காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவன் பலத்த காயத்திற்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் தொடர்பில் இன்னும் சிலரை கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்வதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Comments