தவறான தகவல்களை பரப்பும் இணையதளங்களுக்கு ஆப்பு!
மீண்டும் நாட்டில் யுத்தம் ஒன்று ஏற்படாமல் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக நாங்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கும்போது நாங்கள் நாட்டை பிரிக்கப்போவதாகவும் இராணுவத்தை பலவீனப்படுத்துவதாகவும் பொய்யான பிரசாரங்களை சிலர் மேற்கொண்டு வருகின்றனர் என ஜனாதிபதி தெவித்துள்ளார்.
அவ்வாறு இணையதளங்களில் வருகின்ற தகவல்களை வெளிநாடுகளில் உள்ளவர்கள் நம்பிவிடுகின்றனர். ஆனால் அவை பொய்யான தகவல்களாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
மலேஷியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோலாலம்பூரில் பிரிக்பீல்ட் என்ற இடத்தில் அமைந்துள்ள பௌத்த மகா விஹாரையின் மலேஷிய பிரதான சங்க தேரர் கிரிந்தே தம்மரத்னவை நேற்றுக் காலை சந்தித்து உரையாடியபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கிரிந்தே தம்மரத்ன தேரரும் சிறிது நேரம் சுமுகமான கலந்துரையாடல் ஒன்றை நடத்தினர்.
இதன்போது ஜனாதிபதி மேலும் குறிப்பிடுகையில்,
வெளிநாடுகளில் உள்ளவர்கள் இணையதளங்கள் ஊடாகவே அனைத்து விடயங்களையும் பார்க்கின்றனர். அவற்றில் இலங்கை தொடர்பில் வருகின்ற அனைத்து விடயங்களையும் உண்மை என்றும் வெளிநாடுகளில் உள்ள மக்கள் நம்புகின்றனர்.
வேறு வழியி;ல் தகவல்கள் வருவதில்லை. இணையதளங்கள் ஊடாகவே தகவல்கள் வருகின்றன. உடனே அதில் உள்ளவற்றை உண்மை என நம்புகின்றனர். அதுதான் நடந்துகொண்டிருக்கின்றது.
நாங்கள் நாட்டைப் பிரிக்கப்போவதாகவும் இராணுவ முகாம்களை அகற்றப்போவதாகவும் தவறான தகவல்க ளை பரப்பிக்கொண்டிருக்கின்றனர்.
இராணுவத்தை பலவீனப்படுத்துவதாகவும் கூறிவருகின்றனர். இவைதான் இணையதளங்களில் தற்போது பதிவேற்றப்படும்விடயங்களாக உள்ளன.
இவை பாரிய பொய்யான பிரசாரங்களாகும். நாங்கள் எவ்வாறு நாட்டை முன்னேற்றுவது என்பது குறித்து பாடுபட்டுவருகின்றோம். மீண்டும் யுத்தம் ஒன்று ஏற்படாமல் நாட்டை கட்டியெழுப்ப பாரிய செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளோம்.
இங்கும் சிலர் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர். எவ்வளவாவது பணத்தைத்தேடிக்கொள்ளவே இவ்வாறு கூச்சலிடுகின்றனர். ஒருசிலர் ஒன்றிணைந்து சத்தம்போட்டுவிட்டு அதனைப் புகைப்படம் எடுத்து டொலர்களை பெற்றுக்கொள்வதே இவர்களின் நோக்கமாகும் என்றார்.
இதன்போது மலேஷிய பிரதான சங்க தேரர் கிரிந்தே தம்மரத்ன கருத்து வெளியிடுகையில், நாங்கள் இங்கு என்ன செய்யவேண்டும் என்று கூறுங்கள்.
எங்களால் முடிந்ததை நாங்கள் செய்கின்றோம். இப்போதைய காலத்தில் இணையதளங்களில் நல்லதைப்போன்று தீமையான விடயங்களும் இடம்பெறுகின்றன என்றார்.
கிரிந்தே தம்மரத்தன தேரருடன் கலந்துரையாடிய பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஹாரையில் நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்விலும் கலந்துகொண்டார்.
மலேஷியாவுக்கு மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தைக் கடந்த 15 ஆம் திகதி ஆரம்பித்த ஜனாதிபதி நேற்று முன்தினம் மலேஷிய பிரதமர் அப்துல் ரப்ஸாக்குடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும் நடத்தினார்.
மலேஷிய பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையின்போது இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஐந்து புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டன.
மலேஷிய பிரதமருடனான சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வதேச மேடைகளில் மலேஷியா இலங்கைகு வழங்கிவரும் ஆதரவானது பெறுமதிக்குரியதாகும் என்று குறிப்பிட்டார்.
மேலும் எனது அரசாங்கம் நல்லிணக்கம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி என்ற இரண்டு விடயங்களையுமே பிரதானமாக கொண்டு செயற்படுகின்றது. பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாவிடின் நல்லிணக்கத்தில் வெற்றிபெற முடியாது.
எனவே நல்லிணக்கம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி என்ற இரண்டு விடயங்களிலும் அர்ப்பணிப்புடன் இலங்கை அரசாங்கம் செயற்பட்டுவருகின்றது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.


Comments
Post a Comment