ஜனாதிபதியுடன் சந்திப்பு; முஸ்லிம் MPக்களிடம் ஒற்றுமையை எதிர்பார்க்கலாமா?

இனவாதம் தலைவிரித்தாடும் சூழ்நிலையின் பின்னணியில் நல்லது நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நல்லாட்சியில் இவ்வாறு இடம்பெறுகிறதே எனும் மக்கள் அங்கலாய்ப்புக்கு மத்தியில் நாளைய தினம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.
பாராளுமன்றில் ஆகக்குறைந்தது சில உறுப்பினர்கள் இது தொடர்பில் காரசாரமான கருத்துக்களை முன் வைத்துள்ள நிலையில் இடம்பெறப் போகும் இச்சந்திப்பில் கட்சி பேதங்களுக்கப்பால் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் குரல் இனவாத நடவடிக்கைகளுக்கு எதிராக இருக்கும் என்பது தற்போதைய சூழ்நிலையில் எதிர்பார்க்கக் கூடிய ஒன்று.
ஆனால், கட்சி மற்றும் தனிநபர் நன்மைகளுக்காக ஒட்டுமொத்த குரலாக அது ஒலிப்பது தவிர்க்கப்படுமாக இருந்தால் அது நல்லாட்சியிலும் முஸ்லிம் சமூகம் துண்டாடப்படுவதற்கு வழங்கும் வாய்ப்பாகி விடும்.
பாராளுமன்றிலே இவ்விடயம் பேசப்படுவது குறித்த உடன் பாடு அனைத்து முஸ்லிம் உறுப்பினர்கள் மத்தியிலும் இல்லையென்பது துரதிஷ்டமான உண்மை. காரணம், தாம் சார்ந்த கட்சியின் நலன் மற்றும் சிந்தனைப் போக்காகும். முதலில் தமது கட்சிக்காகப் பேச வேண்டிய நிலையிருப்பதால் மௌனித்திருக்கும் சூழ்நிலையே காணப்படுகறது. மஹிந்த அரசிலும் இவ்வாறே நிலைமையிருந்ததன் பின்னணியில் அமைச்சர்களும் அமைதியாக இருந்து இன்று தாம் உண்மையாகவே சமூகத்துக்காகக் குரல் கொடுத்திருந்தாலும் கூட அது சந்தேகக் கண்ணுடன் பார்க்கப்படுகிறது எனும் உண்மையை உணர்ந்து திரும்பத் திரும்ப வட்ஸ் அப்பிலும் ஆடியோ விளக்கம் அனுப்பும் சூழ்நிலையிருக்கிறது. காரணம் அப்போதைய மௌனம் என்றே வைத்துக் கொண்டாலும் இப்போதும் அவ்வாறு மௌனித்திருக்க ஒரு சிலருக்கு நிர்ப்பந்தம் இருக்கிறது.
அவர்கள் படிப்பினைகளைப் பெற்று எல்லோருடனும் சேர்ந்து ஒற்றுமையாகக் குரல் எழுப்புவார்களா அல்லது முன் வைக்கப்படும் திட்டமிட்ட ஆலோசனைகளுக்கு எதிர்வரும் தேர்தல், அதில் வரும் நன்மைகளைக் கணக்கிட்டு ஏற்றுக்கொள்ளப் போகிறார்களா என்பது இன்றைய கேள்வி.
இனவாத பதட்டத்துக்குத் தொடர்ந்தும் பழகி வரும் அரசியல் கலாச்சாரம் மாறப் பெற வேண்டுமென்பதே மக்கள் அவா!

Comments