“எந்தத் துறை கெளரவமானது?”: O/L மாணவர்களுக்கும் பெற்றோருக்குமான பதிவு!

“எந்தத் துறை கெளரவமானது?”
O/L பரீட்சையை எதிர்னோக்கும் மாணவர்களுக்கும் பெற்றோருக்குமானது.

பரீட்சையை எதிர்னோக்கி விட்டு அடுத்த கட்ட உயர்கல்வி பற்றி சிந்தித்துக் கொண்டும் ஆலோசனை செய்து கொண்டும் இருப்பீர்கள்.

உலகில் நீதிக்கும் அனீதிக்கும் இடையிலான மிகப்பெரும் போராட்டம் அரங்கேறிக்கொண்டிருக்கும் வேளை, அதை ஊக்குவித்துவிட்ட ஒரு பிரதான சக்தியாக இன்றைய கல்வி முறை அடையாளம் காணப்பட்டு விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது.

அதன் ஒரு மிகச் சிறிய பிரதிபலிப்புதான், எமது சமூகங்களில் மாணவர்கள் உயர்தரத்தை நாடும் போது ஒரு சில துறைகள் முன்மாதிரிகளாகவும், கெளரவமாகவும் பார்க்கப்படுகின்ற, ஊக்குவிக்கப்படுகின்ற அதே நேரம், வேறு சில துறைகள் தரம் குறைந்தவையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் அறிவுச் சேர்க்கை (Unity of Knowledge) என்ற மிக முக்கியமான சமூக இலக்கு மறக்கடிக்கப்பட்டு, ஒவ்வொருவரும் தத்தமது துறைகள் மூலமான அதிகாரத்தையும் சமூக அங்கீகாரத்தையும் கெளரவத்தையும் பேணிக் கொள்ள எத்தனிப்பதோடு, அடுத்த துறையின் மேலுள்ள பொறாமைகளின் வெளிப்பாட்டையும் சமூகத்தில் கக்கிக் கொண்டே இருக்கின்றனர்.

மனிதர்களிடையேயான ஏற்றத்தாழ்வின் மூலகர்த்தாக்களுள் ஒன்றாக இருக்கும் இது இன்றைய சடவாத அல்லது நவீன கல்வி முறை எமக்கு தந்துவிட்ட மிகப் பெரும் சாபமாகும்.
நிற்க,

உங்கள் குழந்தைகளின் A/L துறைத் தெரிவு பற்றிய சாராம்சத்தை கூறி விடுகிறேன்.

சிறந்த துறை அல்லது துறை சார் நிபுணத்துவம் என்பது வெறுமனே, அத்துறையில் எட்டும் அதிஉச்ச நிலையோ கலானிதித்துவமோ மட்டுமல்ல. மாறாக, அத்துறையின் உச்சபட்சங்களை அடையும் போது அதிகரித்துச் செல்லும் மனித தார்மீகங்களும் (Morals), மனிதத்திற்கான பங்களிப்புகளும்.

(Contributions to Humanity)
எளிய மக்கள் எதிர்னோக்கும் அனீதிகளை கேள்வி கேட்டலுமாகும்.

இதுதான் ஒரு துறையின் மூலம் ஒருவர் அடையக்கூடிய அதிஉச்சபட்ச நிபுணத்துவ இலக்காக இருக்க முடியும்.

இந்த இலக்கு ஒரு மனிதனால், அவன் எந்தத் துறையில் தனது எதிர்காலத்தை அமைத்துக் கொண்டாலும் அடையப்பட முடியும்; அடையப்பட வேண்டும்.

இவ்வாறுதான் இன்றைய இளைஞர் யுவதிகளுக்கான இலக்கு ஊட்டப்பட வேண்டுமே தவிர, சமூகத்தில் ஊடுருவியுள்ள ஒருசில துறைகளை மாத்திரம் promote பண்ணும் செயற்திட்டங்களும் 
“தலைமைத்துவ பயிற்சிப் பட்டறைகள்” pattern இல் அமைந்த மூளைச் சலவைகளும் வியாபார உத்திகளும் தவிர்க்கப்பட வேண்டும்.

ஏனெனில், அவ்வாறு முன்மாதிரிகளாக காட்டப்படும் துறைகளோ அது சார்ந்த நிபுணர்களோ தொழிற்சந்தையை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் திறனைப் பெற்றிருக்கிறார்களே ஒழிய, மேற்கூறப்பட்ட இலக்கின் பால் செயற்படுபவர்களாக அடையாளம் காணப்படுவதில்லை என்பதே விதிவிலக்குகளை கடந்த பொது விமர்சனம்.

அதே நேரம், குறிப்பிட்ட சில துறைகளைச் சார்ந்தவர்கள் தொழிற்சந்தைக்கும் பொருளாதார எதிர்காலத்திற்கும் சிறப்பாக ஈடுகொடுப்பவர்களாக மாற , வேறு சில துறைகளைச் சார்ந்தவர்கள் மிகப் பெரும் சவால்களை எதிர்னோக்குதல் , எதிர்காலத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் போதல் போன்ற கடினங்களை எதிர்கொள்ளும் போக்கானது மிக அனீதியானதும் சுய நலம் மிக்கதுமே ஆகும்.

அதையும் தாண்டி, சமூகத்தில் ஏற்பட்டிருக்கின்ற மிக முக்கியமான ஏழை- பணக்காரன் என்ற தாழ்வுச் சிக்கலுக்கும், பொருளாதாரம் சார் சமூக அனீதிகள் பலவற்றிற்கும் இத்தகைய “முன்மாதிரி” துறைகள் பல சார்ந்து போயிருப்பதால் எதிர்காலத்தில் மிகக் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகும் வங்குரோத்துத்தனத்தையும் அடையலாம்.
மனிதன் உலகில் படைக்கப்பட்டதன் பிரதான நோக்கு

“சமூக அனீதிக்கெதிராக போராடி உலகிற்கு நலவை நாடுதல்” எனும் இறைவனின் பிரதினித்துவப் பொறுப்பிலேயே ஆகும்.

ஆக, இன்று சமூகம் உருவாக்கி விட்டிருக்கின்ற முன்மாதிரிகள் அல்லது பிரபலங்கள் அல்லது துறைசார் விற்பன்னர்கள் அல்லது அதிசிறப்பு வாய்ந்த துறைகள் என்பன இந்த உன்னத நோக்கில் செயற்படுகின்றதா என்பதை கொஞ்சம் ஆழ யோசித்து உங்கள் பிள்ளையின் அடுத்த கட்டப் படியை தேர்வு செய்வதே தேவையும் பொறுப்புமாகும்.

உயர்கல்வியின் எந்தத்துறை மூலமாகவும், அல்லது உயர்கல்வியே கற்க முடியாதவனாகிலும் கூட மேற்கூறப்பட்ட படைப்பின் இலக்கிற்காய் நாம் உழைக்க முடியும் என்பதும், சமூகத்தில் உயர்ந்த அல்லது தாழ்ந்த துறைகள் என்ற மனனிலை அகற்றப்பட வேண்டும் , பொருளாதார அனீதிகளை சமூகத்திடையே கொண்டிராத ஒரு எதிர்காலம் பற்றி சிந்திக்க வேண்டும் என்பதே பதிவின் சாரமே ஒழிய, எந்தத் துறையையும் சாடுவதோ பிற்படுத்துவதோ அல்ல.

Comments