பொத்தானை பள்ளி தடை நீக்கம்: முஸ்லிம் காங்கிரஸ்



தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களத்தினால் அக்கரைப்பற்றுக்குத் தொலைவில் திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்தில் பொத்தானை ஆராய்ச்சி மரைக்கார் தக்கியா மற்றும் அதனுடனான ஸியாரத்துக்கும் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதற்கு தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகரத்திட்டமிடல், நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் புதைபொருள் ஆராய்ச்சித்திணைக்களப் பணிப்பாளர் கலாநிதி செனரத் திசாநாயக்கவுடன் நேற்று (25) நடத்திய பேச்சுவார்த்தையின்போதே பொத்தானை பள்ளிவாசலுக்கு வெளியார் பிரவேசிப்பதற்கு விடுக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு இணக்கம் காணப்பட்டதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தெரிவித்தார். இப்பேச்சுவார்த்தையில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் அவர்களும் கலந்துகொண்டனர்.

அமைச்சர் ஹக்கீமுக்கும் தொல்பொருளாராய்ச்சி பணிப்பாளருக்குமிடையே நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் புதை பொருளாராய்ச்சித் திணைக்களத்தினால் அங்கு போடப்பட்டுள்ள அறிவித்தல் பலகையையும் நீக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொத்தானைப் பள்ளிவாசல் பிரதேசம் புதைபொருளாராச்சிப் பிரதேசமாக கடந்த டிசம்பர் மாதம் ஏழாம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டது. இதனையடுத்து அமைச்சர் ஹக்கீம் கடந்த 9ம் திகதி அங்கு விஜயம் செய்து நிலைமைகளை அவதானித்து பின் எடுத்த நடவடிக்கையின் பலனாகவே தடை நீக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதம் 14ஆம் திகதி அமீருல் ஜப்பாருள் தர்ஹாவின் நிர்வாக சபையினர் அமைச்சர் ஹக்கீமிற்கு கடிதம் மூலம் இதனைப் பற்றி அறிவித்திருந்தனர். நிர்வாக சபையின் தூதுக்குழுவினர் கொழும்புக்கு விஜயம் செய்து அமைச்சரை நேரடியாகச் சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது.

தொல்பொருள் திணைக்களத்தினால் குறிப்பிட்ட பள்ளிவாசலைச் சுற்றிவர எல்லை வேலி இடபட்டதுடன், இப்பகுதிக்குள் எவரும் பிரவேசிக்க முடியாதெனவும் இதனை மீறுவோருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கடந்த ஒருமாத காலப்பகுதிக்கு முன்னர் இப்பிரதேசத்தில் அறிவித்தல் பலகை இடப்பட்டிருந்தது.

கடந்த 250 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இப்பகுதியில் அமைக்கப்ட்டுள்ள பள்ளிவாசலில் தாம் மதக்கடமைகளை நிறைவேற்றி வந்த வேளையில் பள்ளிவாசலினையும் அதற்கான அடிப்படைத்தேவைகளையும் அமைக்கும் வகையில் கட்டுமானப்பணிகளை மேற்கொண்டிருந்த வேளையில் கடந்த டிசம்பர் மாதம் 07 ம் திகதி இப்பகுதிக்கு வருகை தந்த தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் வணக்கஸ்த்தலத்தினை சுற்றிவர எல்லையிடப்பட்ட கற்களையும் அறிவுறுத்தல் பலகையினையும் இட்டமையினால் இப்பிரதேசத்தில் அசாதாராண நிலை தோன்றியது. இதன் பின்னர் இந்நிலைமையினை நேரில் சென்று ஆராயும் பொருட்டு ஜனவரி 9ஆம் திகதி மு.கா தலைவரம் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினர் கிழக்கு மாகணசபை உறுப்பினர் ஏ.எல்.தவத்தின் அழைப்பின்பேரில் அப்பிரதேசத்திற்கு விஜமொன்றை மேற்கொண்டனர். நிலைமையினை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம் இப்பிணக்கிற்கான  தீர்வினை எட்டும் வகையில் முயற்சிகளை மேற்கொண்டார்.

-Shafeek Hussain

Comments