தேசிய நல்லிணக்க நிகழ்ச்சித்திட்டம் நாளைய தலைமுறைக்கானது!
அது நாளை பிறக்கவிருக்கும் தலைமுறைக்கானதாகும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்க செயலகத்தினால் நடத்தப்பட்ட தலைமைத்துவ பயிற்சி செயலமர்வின் நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
பகைமை, குரோதங்கள் மற்றும் தனக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்ட தனிப்பட்ட நிகழ்ச்சிநிரல்களுக்கு ஏற்ப அதிகாரத்தை இலக்குவைத்து செயற்படும் சிலர் இன்று நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்க நிகழ்ச்சித்திட்டங்களை விளங்கிக்கொள்ளாத வகையில் செயட்பட்டுவருகின்றனர்.
அது அவர்களுக்கு விளங்காத காரணத்தினால் அல்லாது குறுகிய அரசியல் நோக்கங்களுடன் செயற்படுவதேயாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நல்ல விடயங்களை செய்வதற்கு அர்ப்பணிப்புடன் உள்ள அனைவரும் சவால்களுக்கு முகம்கொடுக்கவேண்டியிருக்கும் என்பதுடன், இன்று நாட்டுக்குத் தேவையான தேசிய நல்லிணக்க நிகழ்ச்சித்திட்டங்களை பின்வாங்கச்செய்வதற்கு சில சந்தர்ப்பவாதிகள் மேற்கொண்டுவரும் முயற்சிகளை அனைவரும் விளங்கி செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அரசாங்கத்தின் கொள்கைக்கு ஏற்ப, நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தி மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதைத் தவிர்த்து அனைத்து மக்களும் அச்சமின்றி வாழக்கூடிய நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் உறுதியான வெற்றியை நோக்கிப் பயணித்துவருவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.
‘நான் இலங்கையில் தேசிய ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்’ என்ற உறுதிமொழியில் ஜனாதிபதி கைச்சாத்திட்டதுடன், தேசிய ஐக்கியத்திற்காகவும் நல்லிணக்கத்திற்காகவும் தாம் பல ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்


Comments
Post a Comment