ஆளில்லா விமான கமராவை பயன்படுத்திய நபர் கைது
அனுராதபுரத்திலுள்ள புனித பிரதேசமான ரூவன் வெலிசாயவில் நடைபெற்ற பௌர்மணி தின வழிபாடுகளின் போது கமெரா பொருத்தப்பட்ட ஆளில்லா விமானத்தை பயன்படுத்தி காணொளி எடுத்த ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த கமெரா பொருத்தப்பட்ட ஆளில்லா விமானம், விகாரையின் கலசத்தில் விபத்துக்குள்ளானதை அடுத்து குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர், தனியார் தொலைக்காட்சி நிறுவனமொன்றைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் என தெரியவந்துள்ளது.
கமெரா பொருத்தப்பட்ட ஆளில்லா விமானம் மூலம் நிகழ்வொன்றை ஒளிப்பதிவு செய்வதற்கு உரிய அனுமதியை ருவன்வெலிசாயவில் ஒளிப்பதிவு செய்த நபர் பெற்றிருக்கவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கமெரா பொருத்தப்பட்ட ஆளில்லா விமானத்தை பயன்படுத்துவதாயின் பொலிஸாரிடம் அனுமதி பெற வேண்டும் என கடந்த வாரம் பொலிஸார் அறிவுறுத்தியிருந்தனர்.
அனுராதபுரம் போன்ற புனித பிரதேசங்களில் இவ்வாறான கமெராக்களை பயன்படுத்த வேண்டுமாயின் அட்டமஸ்தான தலைமை பிக்குவிடம் விசேட அனுமதியை பெற வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நுகேகொடை தலவத்துகொடை பகுதியைச் சேர்ந்த குறித்த ஒளிப்பதிவாளர் தனியார் தொலைக்காட்சியொன்றுக்காக பணியாற்றிவருகின்றமை தெரியவந்துள்ளது.
எனினும் சம்பவம் இடம்பெற்ற போது அரசாங்கத் தகவல் திணைக்களத்தால் வழங்கப்பட்ட ஊடக அடையாள அட்டையை காண்பிப்பதற்கு குறித்த நபர் தவறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments
Post a Comment