குடிநீர் வழங்கும் திட்டம் ஆரம்பித்து வைப்பு
(ihzana fareed)
மூதூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கங்குவேலி மற்றும் சேருவில பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நீலப்பொல, சமகிபுர, சிவபுரம், தெகிவத்த, லிங்கபுரம், ஆரியம்மன்கேணி ஆகிய கிராமங்களுக்கான குடிநீர் வழங்கும் திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (12) நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நீர் விநியோக திட்டத்துக்காக 40 கிலோமீற்றர் தூரத்துக்கு குழாய்கள் பதிக்கப்பட்டு மூதூர் நீர் விநியோக திட்டத்திலிருந்து கங்குவேலி, நீலப்பொல ஆகிய பகுதிகளுக்கான இந்த நீர் விநியோகத் திட்டம் 250 மில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 1360 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்படள்ளன.
அத்துடன் கந்தளாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வான் எல பிரதேசத்துக்கு 808.5 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டமும் நேற்று அமைச்சரினால் திறந்துவைக்கப்பட்டது. இத்திட்டத்தின்மூலம் வான் எல மேற்கு, வான் எல கிழக்கு, ஆயிலடி, பன்சல்கொடல்ல, ஜயந்திபுர ஆகிய கிராமங்களிலுள்ள 2,600 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்படவுள்ளன.
சுத்தமான குடிநீர் இன்மையால் சிறுநீரக நோயினாலும், 30 வருட யுத்தத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ள எங்களுக்கு இந்த குடிநீர் திட்டம் பெரிதும் நன்மையளித்துள்ளதாக வான் எல பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். தௌபீக், துரைரட்ணசிங்கம், மாகாண அமைச்சர்களான ஏ.எல்.எம். நஸீர், ஆரியவதி கலபதி, மாகாணசபை உறுப்பினர்களான ஆர்.எம். அன்வர், ஜே.எம். லாஹீர், டொக்டர் அருண சிறிசேன, நளின் குணவர்தன, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் கிழக்கு பிராந்திய பிரதி பொது முகாமையாளர் பொறியியலாளர் ரஷீட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




Comments
Post a Comment