அரிசியின் விலை குறைவு!

அரிசியின் விலை கிலோ ஒன்றுக்கு 10 ரூபாவினால் குறைவடைந்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

அரிசி இறக்குமதிக்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இவ்வாறு அரிசி விலை குறைவடைந்துள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வறட்சி நிலைமைகளுக்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்பது தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியின் தலைமையில் நேற்று (13) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே நிதி அமைச்சர் ரவி கருணாநாயக இதனைத் தெரிவித்தார்.

அதேவேளை நீர் மின்சார அளவு தற்போது படிப்படியாகக் குறைவடைந்து வருவதுடன், அதற்கு மாற்றீடாக அனல் மின் உற்பத்தி மற்றும் சூரிய சக்தி முறைமைக்கான புதிய நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

வறட்சி நிலைமையுடன் ஏற்படக்கூடிய சவால்களை குறைப்பதற்கு நீர் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்து மக்களுக்கு அறிவூட்டவேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இது தொடர்பில் ஊடகங்களுக்கு பாரிய பொறுப்புள்ளது என்றும், இது தொடர்பான விசேட நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தவேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

அமைச்சர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா, ரவி கருணாநாயக, சுசில் பிரேமஜயந்த, ரஞ்சித் சியாம்பலாபிடிய, துமிந்த திசாநாயக்க, பீ. ஹரிசன் பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Comments