அனைத்து தமிழக மீனவர்களும் விடுதலை!


தமிழக மீனவர்கள் அனைவரையும் இன்றைய தினம் விடுதலை செய்வதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மீனவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளனர்.

அவர்கள் இன்னும் ஒரிரு நாட்களில் தமிழகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு இணங்க இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

இலங்கை கடற்பரப்பில் வைத்து அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இதுவரை கைது செய்யப்பட்ட 51 தமிழக மீனவர்களும் பல்வேறு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2ஆம் திகதி இலங்கை – இந்திய மீன்பிடி அமைச்சர்களுக்கு இடையில் கொழும்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கு இந்திய தரப்பினரால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளினை ஏற்பதாக இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இந்த வேண்டுகோள் சட்டமா அதிபரிடம் முன்வைக்கப்பட்டதை அடுத்து குறித்த மீனவர்களை விடுவிப்பதற்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய இன்றைய தினம் அந்தந்த நீதிமன்றங்களில் தமிழக மீனவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டு, விடுதலை செய்யப்பட்டு பின்னர் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உதவியுடன் இலங்கை கடற்படையின் ஊடாக இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என இலங்கை மீன்பிடித்துறை அமைச்சின் ஊடகச் செயலாளர் வன்னியாநக்க தெரிவித்தார்.

அத்தோடு நேற்று கைது செய்யப்பட்ட 10 மீனவர்களை எதிர்வரும் நாட்களில் விடுதலை செய்வதற்கு தீர்மானம் எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Comments