திருமலையில் உயர் கற்கை நெறிகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு


ABDUL SALAM YASEEM

உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் கீழ் இயங்கும் திருகோணமலை உயர் தொழிநுட்பவியல் நிறுவகத்தின் கற்கை நெறிகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக அந்நிறுவகத்தின் நுாற்றுக்கணக்கான மாணவர்கள் நேற்றைய தினம் (25) திருகோணமலை மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களுக்கும் சென்று துண்டுப்பிரசுரங்களை வினியோகம் செய்ததுடன் விளக்கங்களையும் அளித்தனர்.

திருமலை நகரம், உவர்மலை, செல்வநாயகபுரம். மனையாவெளி, நாலாம் கட்டை, பாலையூற்று, முள்ளிப்பொத்தானை, ஹபறணை, புல்மோட்டை, கின்னியா, மூதூர்.மொரவெவ, கந்தளாய், நிலாவெளி. ஹொறவப்பொத்தானை, தம்பலகாமம், சாம்பல் தீவு, சல்லி, உப்புவெளி, தோப்பூர் என அனைத்துப் பிரதேசங்களுக்கும் அம்மாணவர்கள் சென்றிருந்தனர்.

திருகோணமலை உயர் தொழிநுட்பவியல் நிறுவகத்தில் கணக்கியல், ஆங்கிலம், தகவல் தொழிநுட்பம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் ஆகிய துறைகளில் உயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

க.பொ.த உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் முழு நேரக் கற்கை நெறிகளுக்கும் உத்தியோகஸ்தர்கள் மற்றும் தொழிலாளர்கள் பகுதி நேரக் கற்கை நெறிகளுக்கும் விண்ணப்பிக்க முடியுமெனவும் மேலதிக விபரங்களை அறிய www.trincoati.com இணையத்தளத்தை அணுகுமாறும் நிறுவகத்தின் பிரதிப் பணிப்பாளர் திரு ஜெ.பிரதீபன் தெரிவித்தார்.

Comments