மௌலவி ஆசிரியர் வெற்றிடங்கள் விரைவில் நிரப்பப்படும் – அமைச்சர் ரவூப் ஹக்கீம்
மௌலவி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் வேலைத்திட்டத்தை பிரதமருடன் சேர்ந்து விரைவில் நிறைவேற்றித் தருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
மௌலவி ஆசிரியர் நியமனங்கள் தொடர்பாக இஸ்லாமிய ஆசிரியர் சங்கம், அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் இன்று சனிக்கிழமை (28) நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையில் கலந்துரையாடியபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது,
போட்டிப் பரீட்சை நடாத்தப்பட்டு ஒரு தொகுதி மௌலவி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் கடந்த 7, 8 வருடங்களாக எவ்வித பரீட்சைகளோ நியமனங்களோ வழங்கப்படாத நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.
மௌலவி ஆசிரியர் நியமனங்கள் தொடர்பாக தொடர்ச்சியாக நாங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அவ்வப்போது ஆட்சியிலுள்ள ஆட்சியாளர்களிடம் இதுகுறித்து பேசியிருக்கிறோம். ஆனால், இந்த நியமனங்கள் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வரும் ஒருநிலையில் இருந்து வருகிறது.
அண்மையில் நடைபெற்ற தேசிய மீலாத் தின நிகழ்வுக்கு பிரதமர் வருகை தருவதற்கு முன்னர், மௌலவி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பித்தருமாறு அவரிடம் கோரிக்கை விடுத்தேன். அதற்கு இணக்கம் தெரிவித்த பிரதமர், கல்வி அமைச்சு வாயிலாக அதனை நிறைவேற்றித் தருவதாக மேடையில் வாக்குறுதியளித்தார்.
அதன்பின்னர் இவ்விவகாரம் தொடர்பில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசமுடனும் பேசினேன்;. அவரும் அதற்கு இணக்கம் தெரிவித்து, மௌலவி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக என்னிடம் கூறினார். தேவைப்படின் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்தாவது மௌலவி ஆசிரியர் வெற்;றிடங்களை நிரப்பித் தருவேன் என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.




Comments
Post a Comment