அஷ்ரப் மரணித்ததோடு பேய் வீடாய் மாறிப்போன பல கோடி மதிப்புள்ள ஒலுவில் வீடு.
முஸ்லிம் சமூகம் தடம் புரளும்போதெல்லாம் துணிச்சலுடன் தனிமனிதனாக நின்று மக்களின் உதவியுடன் நெறிப்படுத்தி வழிநடத்திச் சென்றவர் மாமனிதர் அஷ்ரப் ஆவார்.தன் சமூகம் எந்த இனத்துக்கும் எச்சந்தர்ப்பத்திலும் யாருக்கும் அடிபணியக் கூடாது.
தன் மக்களுக்காக எவ்விடத்திலும் யாருடனும் பேசுவதற்கும் தயங்க மாட்டேன் என்பதை செயல் மூலம் நிரூபித்துக் காட்டிய மனிதர் அந்தப் பெரும் தலையாகும்.
துரோகிகளை போராளிகளாக்கியும் போராளிகளை கெளரவித்தும் அழகுபார்த்து பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து முஸ்லிம்களின் மூச்சும் பேச்சும் முஸ்லிம் காங்கிரஸாகவே இருக்க வேண்டும். என்று தன் கட்சியை வழிநடத்தி சென்றவர் என்பதை யாராலும் மறக்கவோ மறுக்கவே முடியாது.
அதனால் அவர் மக்களுக்காகவும் தனது கட்சியை விஸ்தரிப்பு செய்வதற்காகவும் பல மாற்று திட்டங்களை வகுத்தார். அவற்றுள் சில நிறைவேறியும் பல நிறைவேறாமலும் இறையடி சேர்ந்து விட்டார்.
அன்னாரின் பாவங்களை இறைவன் மன்னித்து சுவனத்தைக் கொடுப்பானாக.
அந்த மாமனிதரின் கனவுகளின் ஒன்றுதான் ஒலுவில் பிரதான நுழைவாயில் வீதியில் காணப்படும் பல கோடி மதிப்புள்ள வீடாகும்.
இதை தலைவர் தனது நேரடி கண்காணிப்பின் கீழ் மிகவும் நேர்த்தியான முறையில் திட்டமிட்டு தனது கட்சியின் சின்னத்தை ஒத்ததுபோல் வடிவமைத்து அழகு பார்க்கக் கட்டினார்.
அதுமட்டுமா தான் மரணித்தால் கூட இந்த ஒலுவிலில் மண்ணில்தான் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.
ஆனால் துரஷ்டவசமாக அது நடை பெறவில்லை.அது முடியாமல் போய் விட்டது.
அதன் பின்பு இந்த வீடு கவனிப்பாரற்று பேய் வீடாக காட்சி தருவதை பார்க்கும்போது தலைவரை நேசித்த அனைவருக்கும் வேதனையை தருவது மட்டுமல்ல சிந்திக்கவும் வைத்துள்ளது!
காரணம் மாமனிதர் விட்டுச் சென்ற இந்த வீட்டைக்கூட பராமரிக்க தெரியாத இப்போதுள்ள கட்சியின் தலைவர் ஹக்கீம் அவர்கள் விட்டுச் சென்ற சமூகத்துக்காக எவ்வாறு குரல் கொடுப்பார் பாதுகாப்பார்?
அல்லது ஒலுவில் என்பதனாலா இப்படி பொடுபோக்காக இருக்கிறார் எல்லா விடயத்திலும் ?
எத்தனையோ தடவை வந்து செல்லும் அமைச்சர் ஹக்கீம் இந்த வீட்டை கடந்துதான் செல்லுவார்.
அப்படி செல்லும்போதாவது கண்ணுக்கு தெரியாமல் விட்டது ஏன்? கறுத்த கண்ணாடி போட்ட வாகனத்தில் செல்லுவதனாலா!
இல்லவே இல்லை.
எல்லாமே தனது வாக்கு வங்கியை மட்டும் இலக்காக வைத்தே...
வருவதும் போவதுமாகும்.
அப்படி இந்த வீடு கண்ணுக்கு தெரியவில்லை என்றால் நிச்சயம் அந்த ஊர் மக்கள் இழந்தவைகளையும் அதனால் படும் துன்பங்களையும் கண்டு கொள்ளவே இல்லை என்பதையே அழகாக உணர்த்துகிறது.
வார்த்தைக்கு வார்த்தை மேடைக்கு மேடை மாமனிதரின் பேச்சையும் புகைப்படத்தையும் காட்சிப்படுத்திக் கொண்டு. வாயால் மட்டும் பூசி மறைத்துக் கொண்டு சென்றால் அவரின் கனவுகள் நிறைவேறி விட்டதாகி விடுமா என்ன?
அதுதான் காலாகாலம் அரங்கேறிக் கொண்டிருக்கு மக்கள் மத்தியில் என்பதும் அறியாமலில்லை.
சரி தலைவர் ஹக்கீம்தான் ஒலுவில் மக்களின் விடயத்தில் ஒரு மாற்றுக் கண் கொண்டு பார்க்கிறார் என்றால், அந்த ஊரிலுள்ள அரசியல் முகவர்களுக்காவது இது தெரிவதில்லையா?
வருகின்ற அரசியல்வாதிகளாவது மொத்த மக்களின் மன நிலையையும் ஊர் நிர்வாகிகளின் கருத்துக்களையும் கேட்டறிந்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதை விடுத்து,
ஒரு சிலரின் பைகளை நிரப்பி அவர்கள் மூலம் பிச்சை போட்டு தனது காரியங்களை சாதித்துக் கொள்வதே இவர்களின் சாணக்கியமாக இருக்கு.
சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கும் கலாச்சாரமே செய்து கொண்டிருக்கிறார்கள்.
உண்மையில் ஊரைப்பத்தி மக்களைப் பத்தி கொஞ்சமாவது கவலை இருந்தால் உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு.
வருகின்ற அரசியல் தலைவர்களிடம் தேவைகளை சொல்லி சேவைகளை பறித்து எடுக்க முடியும்.
ஆனால் எல்லோருமே தனது பையை நிரப்புவதிலும்.தனக்கு பின்னால் வால் பிடித்து சுத்துபவர்களுக்கும் ஐந்தோ பத்தோ கொடுத்து வாயை அடைத்துக் கொண்டு
வருகின்ற அபிவிருத்திகளைக் கூட அற்ப சொற்ப இலாபங்களுக்காக மற்ற ஊர்களுக்குக் கொடுத்து விட்டு ஏப்பம் விட்டுக்கொண்டு காலத்தை ஓட்டும் அரசியல் வாதிகளாகத்தான் இருக்கிறார்கள்.
இப்படி இருந்தால் எப்படி ஊர் முன்னேற்றம் அடைவது? இருளில் இருந்து எப்போது வெளிச்சத்துக்கு வருவது? இதை கொஞ்சமாவது யோசித்தார்கள் என்றால் கூட்டத்தை காட்டி வயிறு வளர்க்க மாட்டார்கள்.
சரி இந்த வீட்டினால் என்னதான் நன்மை ஊருக்கு என்றும் நினைக்க தோணும்.
நிச்சயம் இருக்கு இந்த ஊரின் அமைவிடம் பிரதான வீதியை விட்டு உள்ளே இருப்பதனால். இரவு வேளைகளில் இருட்டடைந்து காணப்படுகிறது.
அந்த பகுதியில் இருக்கின்ற ஒரு சில கட்டங்களும் பாவனையில் இல்லை. அதனால் பயணிகளுக்கு அசௌகரியம் இப்படி பல விடயங்களை பட்டியலிட முடியும்.
இப்படி இருக்கும் நிலையில் இந்த வீடு தலைவர் அஸ்ரப் மரணித்ததோடு அனாதையாக்கப் பட்டுள்ளது மட்டுமல்ல இந்த ஊரும் அனாதையாக்கப் பட்டுள்ளது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்கவே முடியாது.
இருந்தும் இந்த வீட்டையாவது ஏதாவது மக்களின் தேவைக்கு பயன்படுத்தி உயிர்ப்பித்திருந்தால் அந்த ஏரியாவே ஒரு வெளிச்சமான இடமாக இருப்பது மட்டுமல்ல.இரவில் பயணிப்பவர்கள் கூட எந்த அச்சமும் இல்லாமல் பயணிக்கக் கூடிய ஒரு வாய்ப்பும் இருந்திருக்கும். பல கோடி மக்களின் பணமும் வீண்விரயம் ஆகுவதை தடுத்திருக்கலாம்.
ஆனால் இன்று பேய் விடாக மாறியிருப்பது என்பது மனதுக்கு சங்கடத்தை கொடுப்பது மட்டுமல்ல சிந்திக்க வேண்டியதுமே.
* இந்த வீட்டை மக்களின் தேவைக்காக அரச அலுவலகமாக பாவித்திருக்கலாம்.
*அல்லது அந்த கட்சியின் அலுவலகமாக மாற்றியிருக்கலாம்.
*இல்லாது போனால் ஊரின் பள்ளிகளுக்காவது கொடுத்து இதை பாவனைக்கு ஏற்றால்போல் மாற்றி வருமானம் வரக்கூடியதாக ஆக்கிருக்கலாம்.
அப்படி ஏதாவது ஒரு தேவைக்கு மாற்றி வெளிச்சத்தை கொடுத்திருந்தால் மாமனிதர் எடுத்த முயற்சிக்கும்.
அவர் எதிர்கொண்ட பிரச்சினைக்கும்
மக்களுக்குக்காவது பிரயோசனம் கொடுக்கிறது என்ற ஒரு ஆத்ம திருப்தியாவது ஏற்பட்டிருக்கும்.
இத்தகு நல்ல நோக்கங்களுக்காகவே அந்த கட்சிக்காக இரவு பகலாக உழைத்த மர்ஹூம் நூஹுலெப்பை இந்த இடத்தை அன்பளிப்பாக வழங்கியிருந்தார்.
இப்படியெல்லாம் செய்ய வேண்டும் என்ற ஒரு நிலைப்பாடு இருப்பதாகவும் தெரிய வில்லை இதுவரை, இப்போதுள்ள தலைவர் ஹக்கீமுக்கு.
ஆகவே இனியாவது இந்த பேய் வீட்டை மக்கள் பாவனைக்கு கொண்டுவர அழுத்தம் கொடுப்பார்களா உள்ளூர் அரசியல்வாதிகள்?
அதற்கு தலைவர் ஹக்கீம் இனியாவது கண் திறந்து இந்த வீட்டை உயிர்ப்பித்து கொடுப்பாரா?
அல்லது ஏதாவது சாட்டுப் போக்குச் சொல்லி காலத்தை வீணடித்து எஞ்சியுள்ளதையும் அழிக்கப்படுமா?
புத்திஜீவிகளே நிர்வாகிகளே இளைஞர்களே பொது அமைப்புக்களே இது உங்களின் கவனத்துக்கு!
குறிப்பு:- இனியும் இதை இப்படியே கண்டும் கானாதுபோல் விட்டால்.பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்.
தொடரும்........
(ஒலுவில் ஜெலில்)

Comments
Post a Comment