மு.கா.தேசியப்பட்டியல்: ஹக்கீமே தீர்மானிப்பார்
தற்போதைய தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.சல்மான் கட்சித்தலைவர் கோரும்போதே தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர்பீட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் விவகாரம் குறித்து கருத்து வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலிக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது கட்சியின் தேசியப் பட்டியல் பிரச்சினை தீர்த்துவைக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தாரேயன்றி எப்போது தீர்த்துவைக்கப்படுமென்று கால அவகாசம் குறிப்பிடப்படவில்லை.
எதிர்வரும் 11ஆம் திகதி கட்சியின் அரசியல் உயர்பீடக் கூட்டம் நடைபெறவுள்ளது.
அக்கூட்டத்தில் இதுபற்றி எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படமாட்டாது. மறுதினம் 12ஆம் திகதி கட்சியின் பேராளர் மாநாடு தெஹிவளையில் நடைபெறவுள்ளது.
பேராளர் மாநாட்டிலும் இவ்விவகாரம் தீர்மானிக்கப்படமாட்டாது. கட்சியின் தலைவர் கூறும்போதே பாராளுமன்ற உறுப்பினர் சல்மான் தனது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வார். அவ்விடத்துக்கு ஒருவரை அவரே சிபார்சும் செய்வார் என்றார்.


Comments
Post a Comment