12 ஆயிரம் முன்னாள் புலிகளை மீண்டும் கைது செய்யவேண்டும்
சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்க அரசாங்கம் தயாராக இல்லை; சர்வதேச நீதிபதிகளை அனுமதித்து தமிழ் மக்களின் நீதியை பெற்றுக்கொடுக்க முடியும் என தமிழர் தரப்பு எதிர்பார்க்கின்றது என்றால் அது தமிழீழத்தை தரவேண்டும் என்று கோருவதற்கு சமனாகும் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இராணுவம் விதிமுறைகளை மீறி செயற்பட்டிருந்தால் அது தொடர்பில் ஆராயவேண்டும். அதேபோன்று புலிகளின் செயற்பாடுகள் குறித்தும் விசாரிக்கவேண்டும். விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் 12 ஆயிரம் பேரை மீண்டும் கைது செய்யவேண்டும் எனவும் அவர் குறிப்பிடார்.
சர்வதேச நீதிபதிகளை வரவழைத்து சர்வதேச விசாரணைகளின் மூலமாக தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுகொடுப்பது தொடர்பில் ஆராய வேண்டும் என வடமாகாண முதல்வர் தெரிவித்துள்ள நிலையில் இது குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
இலங்கையின் அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் தீர்வுகளை பெற்றுக்கொடுக்கவோ அல்லது அதிகாரப் பகிர்வு தீர்வு தொடர்பில் செயற்படவோ இவர்கள் சர்வதேச நீதிபதிகளை அழைக்கவில்லை.
அதற்கான தேவையும் இல்லை. அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் அக்கறை செலுத்தி வருகின்றது. ஆனால் யுத்த குற்றங்கள் தொடர்பில் ஆராயவும் புலிகளுக்கு நீதியை பெற்றுக் கொடுக்கவும் இராணுவத்தை தண்டிக்கவுமே இவர்கள் சர்வதேச நீதிபதிகளை வரவழைக்கப்பார்க்கின்றனர்.
அவ்வாறு இவர்கள் சர்வதேச நீதிபதிகளை வரவழைக்க வேண்டும் என்றால் ஈழம் வேண்டும் என்பதா தமிழர் தரப்பின் கோரிக்கை என்பதை அவர்கள் வெளிப்படுத்த வேண்டும் . யுத்த குற்றம் தொடர்பில் ஆராயப்பட வேண்டும் என்பதில் தவறில்லை.
இலங்கை இராணுவம் யுத்த விதிமுறைக்கு முரணாக மனித உரிமை மீறல்களை மேற்கொண்டிருப்பின் அவற்றை ஆராய வேண்டும். அதேபோல் விடுதலைப் புலிகளின் குற்றங்களையும் விசாரிக்க வேண்டும்.உலகளாவிய ரீதியில் தடைசெய்யப்பட்ட ஆயுத குழுவின் நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களை பணயம் வைத்து அவர்கள் மேற்கொண்ட அராஜக நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அவர்களை தண்டிக்க வேண்டும்.
இறுதி யுத்தத்தில் கைதுசெய்யப்பட்ட மற்றும் சரணடைந்த விடுதலைப்புலிகள் உறுப்பினகள் 12ஆயிரம் பேரை முன்னைய அரசாங்கம் விடுதலை செய்துள்ளது. அவர்களை மீண்டும் கைதுசெய்ய வேண்டும். ஜனநாயகம் நீதி நிலைநாட்டப்பட வேண்டுமாயின் இரு தரப்பினரின் நியாயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நாட்டை காப்பாற்றி பாதுகாத்து வரும் இராணுவத்தை தண்டித்து சர்வதேச பயங்கரவாத அமைப்பை நியாயப்படுத்துவது எந்த வகையிலும் நியாயமாக அமையாது.
சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டாலோ அல்லது உள்ளக விசாரணைகளை மேற்கொண்டாலோ இரு தரப்பின் குற்றங்களையும் விசாரிக்க வேண்டும். அதேபோல் அவ்வாறான நகர்வில் சர்வதேச அமைப்புகளுடன் செயற்பட்டு வரும் புலிகளின் உறுப்பினர்களை கைதுசெய்து அவர்களை இலங்கையிடம் ஒப்படைக்க வேண்டும்.
இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசியல் கட்சியாக ஜனநாயக ரீதியில் செயற்பட்டு வந்தாலும் ஆரம்பத்தில் இவர்களும் புலிகளின் கூட்டணியில் இருந்தவர்கள். இன்று பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழர்கள் அன்று ஆயுதம் ஏந்தி எமக்கு எதிராக போராடியவர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.
ஆகவே வெறும் அரசியல் நடவடிக்கைகளுக்காக வார்த்தைகளை வெளிப்படுத்தி மக்களை குழப்பும் நடவடிக்கைகளை தமிழர் தரப்பு விடவேண்டும். இன்று நாட்டில் ஜனநாயக ரீதியில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சகல பகுதிகளிலும் நல்லிணக்க வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். அவ்வாறு இருக்கையில் ஒரு சாராரின் கொள்கைகள், பிரிவினைவாத செயற்பாடுகள் மூலம் நாட்டின் ஜனநாயகத்தை குழப்பக் கூடாது. அவை நாட்டுக்குள் செல்லுபடியாகாது என்றார்.

Comments
Post a Comment