26,900 ரூபா கண் வில்லை ரூ.17,000 ஆக குறைப்பு பாரிய வெற்றி என்கிறார் அமைச்சர் ராஜித
பிரச்சினைகள் இல்லாமல் தீர்வோ அல்லது புரட்சியோ ஏற்பட்டதில்லை. இப்போதும் பல பிரச்சினைகள் சுகாதாரத்துறையில் நிலவுகின்றன.எனினும் கண்வில்லைகளுக்கான விலையை குறைக்க கிடைத்தமை பாரிய வெற்றியாகும் அந்த வகையில் 26900 ரூபாவாகவிருந்த கண்வில்லை தற்போது 17 ஆயிரம் ரூபாவாக குறைக்கப்ப்டுள்ளது என்று என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.
சுகாதார அமைச்சில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியளாளர் சந்திப் பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஏற்கனவே 48 வகையான மருந்துகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு விலைக்குறைப்பும் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது கண்வில்லை மற்றும் கண்வில்லை சார்ந்த மருந்துப்பொருட்களுக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளமை மாபெரும் வெற்றியாகும்.
மருந்துப்பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வது எவ்வளவு முக்கியமானது என்பதை உலக நாடுகள் பலவும் உணர்ந்துக்கொண்டுள்ளன. ஆனால் நாம் முன்கூட்டியே மருந்துப்பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும்.
இதனடிப்படையில் 26900 ரூபாய் கண்வில்லை 17000 ஆகவும் 25900 ரூபாய் கண்வில்லை 16600 ஆகவும் 28000 ரூபாய் கண்வில்லை 18200 ஆகவும் 25900 ரூபாய் கண்வில்லை 15500 ஆகவும் 25000 ரூபாய் கண்வில்லை 15000 ஆகவும் 25000 ரூபாய் கண்வில்லை 12100 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு 38 வகையான கண்வில்லைகளின் பொருட்களுக்கு விலைக்குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.
மருத்துவம் என்பது சேவையாகும் என்ற வகையில் அனைத்து வகையான அரச வைத்தியசாலைகளுக்கும் குறித்த விலைக்குறைப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதுவரையில் குறித்த விலைச்சூத்திரத்தை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளாகியிருந்தோம். இவ்வுலகில் பிரச்சினை ஒன்று தோன்றாமல் மாற்றம் ஒன்று நிகழ்ந்திருக்க முடியாது. அதுபோலவே ஒரு மாற்றத்தை அடைய பல பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். அவற்றை நாம் வெற்றிக்கொள்ள வேண்டும்.
லெனின் ஆட்சிக்காலத்தில் பல வகுப்பு சமூகத்தை மாற்றி ஒரே குடையின்கீழ் அனைவரையும் இணைத்தார். அவர் அந்த புரட்சியை அடைவதற்கு பல பிரச்சினைகளை சந்தித்திருந்தார். அவ்வளவு அபிவிருத்தி அடைந்த சமூகத்தில் பலம் பொருந்திய படையை கொண்ட நாட்டில் அவ்வளவு பிரச்சினைகள் தோற்றுவிக்கப்பட்டதென்றால் நாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அவ்வளவு பாரதூரமானதாக இருக்க முடியாது. அந்த பிரச்சினைகளை சந்திக்க நாம் தயாராகவுள்ளோம்.
கடந்த ஆட்சிக்காலத்தில் சுகாதார அமைச்சராக இருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுகாதாரத்துறையை பாதுகாப்பதற்கு பல வேலைத்திட்டங்களை கொண்டு வர முயற்சித்தார். ஆனால், அதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ முழுமையாக இடம்கொடுக்கவில்லை. ஆனால் இப்போது நான் சுகாதார அமைச்சராக இருக்கின்றபோது அந்த பிரச்சினை இல்லை. எனக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முழுமையான ஆதரவை வழங்குகின்றார். ஆகவே, பிரச்சினைகளை எதிர்கொள்ளும் வல்லமை என்னிடம் உள்ளது.
இந்நாட்டில் ஊடகங்களும் பிரச்சினைகளை பற்றி விமர்சிக்கின்றனவே தவிர நாம் செய்யும் நல்ல விடயங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில்லை. இவ்வருடத்தை உலக சுகாதார தாபனம் புகைத்தலுக்கு எதிரான வருடமாக பெயரிட்டுள்ளது. புகைத்தலை ஒழிப்பதற்காக ஒரு ட்ரில்லியன் பணத்தை செலவழிக்கின்றது. இலங்கையிலும் கூட வருடத்துக்கு 25000 பேர் வரையில் புகைத்தலால் இறக்கின்றனர். எனவேஇ நல்லாட்சி அரசாங்கத்தில் புகைத்தலை இல்லாமலாக்க வேண்டும் என்பதற்காக புகையிலைசார் பொருட்களுக்கு 90 வீதம் வரையில் வரியை அதிகரித்திருந்தோம்.
இந்நிலையில் இதற்கெதிராக நாட்டுக்கு பல மில்லியன் நட்டம் ஏற்படும் என தெரிந்தும் இந்த முடிவை எடுத்தோம். அமைச்சரவையிலும் கூட எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். புகையிலைசார் பொருட்களை அவர்களின் பேச்சைக் கேட்டு நிர்ணயித்திருந்தால் 269 மில்லியன் இலாபம் கிடைத்திருக்கும். அந்த இலாபத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் எதிர்ப்பார்க்கவில்லை. எனவே நாம் நினைக்கும் மாற்றம் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் வெற்றியளிக்கும் என்றார்.


Comments
Post a Comment