அக்குறணை அஸ்ஹர் பிரதி அதிபருக்கு விசேட காரணங்களுக்கமைய பிணை
இலஞ்சம் பெற்றதாக கூறி கடந்த 23 ஆம் திகதி இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினரால் கைதுசெய்யப்பட்ட அக்குறணை அஸ்ஹர் கல்லூரியின் பிரதி அதிபருக்கு விசேட காரணங்களுக்கமைய நேற்று பிணை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் விசேட காரணங்களுக்காக இரண்டு சரீரப்பிணை மற்றும் 10 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையில் பிரதி அதிபர் திருமதி ருகையாவை விடுவித்தது.
நேற்றைய தினம் குறித்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்றது.
பாடசாலை சார்பாக சட்டத்தரணிகளான அனில் சில்வா மற்றும் என். எம்.சயீட் ஆகியோர் ஆஜராகினர்.
இதன்போது, பிரதி அதிபர் திருமதி ருகையாவுக்கான பிணை கோரிக்கையை பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்தனர்.
இதேவேளை, குறித்த பிரதி அதிபர் பாடசாலையில் நீண்ட கால சேவையில் ஈடுபட்டதாகவும் அவர் சிறந்த பண்புகளைகொண்டவர் என பலவேறு விடயங்களை குறிப்பிட்டு பாடசாலையின் பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் கையொப்பமிட்ட நீதிச் சேவை ஆணைக்குழு மற்றும் இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு என்பவற்றிற்கு கையளித்த மகஜர் நீதி மன்றுக்கு சமர்பித்ததாக சட்டத்தரணி என்.எம்.சயீட் தெரிவித்தார்.
அத்துடன், அக்குறணை அஷ்ஹர் தேசிய பாடசாலை 1000 பாடசாலைகள் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டமையினால் அதற்கான போசனை பாடசாலைகளிலிருந்து மாணவர்களை உள்ளீர்ப்பதற்காக 6 ஆம் தரத்திற்கு ஆறு வகுப்பறைகள் உள்ளடக்கப்பட்டிருந்தன. எனினும் இம்முறை அதிகமான விண்ணப்பங்கள் கிடைத்தமையினால் மேலதிகமா ஒரு வகுப்பறையை உருவாக்கிவேண்டிய தேவை ஏற்பட்டதாகவும் அதற்காக பெற்றோரின் தீர்மானத்திற்கமைய புதிய வகுப்புக்கான கதிரை மேசைகளை கொள்வனவு செய்தல் உள்ளிட்ட செலவினங்களுக்காக ஒவ்வொரு பெற்றோரிடமிருந்தும் 7500 பெறுவதாக தீர்மானிக்கப்பட்டதாக நீதிவானின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இதற்கமையவே பாடசாலையில் நிதி சேகரிக்கப்பட்டதாகவும் அதற்காக பெற்றோர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்த நிலையிலேயே பலவந்தமாக பிரதி அதிபரிடம் பணம் ஒப்படைக்கப்ட்டதாகவும் ஒது ஒரு சதி எனவும் நீதிமன்றில் சுட்டிக்காட்டப்பட்டது.
அத்துடன் பிரதி அதிபரின் மகளுக்கு எதிர்வரும் ஐந்தாம் திகதி திருமணத்திற்காக திகதி குறிக்கப்பட்டிருப்பதையும் இதன்போது நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
அத்துடன் சதித்திட்டம் குறித்தும் அதன் பின்னணியில் இருப்பவர்கள் குறித்து நீதிவானுக்கு பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர்.
பிரதிவாதி தரப்பின் வாதங்களை ஆராய்ந்த கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்ற நீதிபதி பிரதி அதிபர் திருமதி ருகையாவை ஒரு இலட்சம் பெறுமதியான இரு சரீரப்பிணைகள் மற்றும் 10 ஆயிரம் ரூபா ரொக்கப்பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.
அத்துடன் எதிர்வரும் 28 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் அறிவித்தார்.


Comments
Post a Comment