கல்விக்கான நிதி ஒதுக்கீடுகளில் முன்னுரிமைகளை இனங்காண்பதற்கு கல்வியமைச்சு தலையிட வேண்டும் – ஜனாதிபதி
கல்விக்காக பல்வேறு ஒதுக்கீடுகள் செய்யப்பட்ட போதிலும் பாடசாலைகளில் நிலவும் அடிப்படைத் தேவைகள் நிறைவு செய்யப்படாதிருப்பது பாரதூரமான பிரச்சினையாகுமெனவும், நிதியொதுக்கீடுகளை செலவிடவேண்டிய முன்னுரிமைகளை இனங்காண்பதற்கு கல்வி அமைச்சு தலையீடு செய்யவேண்டுமெனவும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.
கொழும்பு டீ.எஸ்.சேனநாயக்கா கல்லூரியின் பொன்விழா நிகழ்வில் இன்று (10) முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த ஆண்டின் மாகாண சபைகளுக்கான நிதி தேவைக்கு அதிகமானது என்பதனால் அதனை வேறு விடயங்களுக்கு மாற்றுவதற்கு சில மாகாண கல்வி அமைச்சர்கள் கேட்கின்றனர். அந்தளவுக்கு நிதி கிடைத்திருந்தும் பெரும்பாலான மாகாண பாடசாலைகளில் கழிவறைகள், தளபாட தேவைகள் முழுமைப்படுத்தப்படவில்லை எனவும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.
1967 ஆம் கொழும்பில் பிரபல ஆண்கள் பாடசாலைகளில் நிலவிய நெருக்கடிக்கு தீர்வாக ஐ.எம்.ஆர்.ஈரியகொல்ல அவர்களது தலைமையில் கொழும்பு டீ.எஸ்.சேனநாயக்கா கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு, அதனை குறுங்காலத்தினுள் மிகவும் பிரபலமான ஆண்கள் பாடசாலையாக மாற்றுவதில் அக்கல்லூரியின் முதலாவது அதிபர் ஐ.ஆர்.ரி.அலஸ் வெற்றிபெற்றார்.
சகல இனங்களையும், மதங்களையும் சேர்ந்த பிள்ளைகள் சமமாக கல்வி பெறக்கூடிய மற்றும் சிங்கள, தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் கல்வி பெறக்கூடிய முதன்மை ஆண்கள் பாடசாலையான டீ.எஸ்.சேனநாயக்கா கல்லூரி இன, மத நல்லிணக்கத்தின் முன்னுதாரணம் வழங்கும் கல்வி நிறுவனமாகும்.
கல்வி அமைச்சின் நிதியொதுக்கீட்டில் டீ.எஸ்.சேனநாயக்கா கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டுமாடி கட்டிடத்தின் நினைவுப் பலகையை ஜனாதிபதி அவர்கள் திறந்து வைத்தார்.
பொன்விழாவுக்காக வெளியிடப்படும் ஞாபகார்த்த முத்திரை மற்றும் முதல்நாள் தபாலுறை தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் அப்துல் ஹலீம் அவர்களால் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது. கல்லூரி அதிபர் ஏ.எம்.எம்.ரத்னாயக்க அவர்களால் பொன்விழா சஞ்சிகை மற்றும் நினைவுப் பரிசு ஜனாதிபதி அவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.
சமய குருமார்கள், அமைச்சர்களான அகில விராஜ் காரியவசம், சுசில் பிரேம ஜயந்த, எரான் விக்ரமரத்ன, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட பெருமளவானோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி ஊடக பிரிவு
2017. 02.10


Comments
Post a Comment