பாடசாலையின் மேல் பாலத்தில் இருந்து கீழே குதித்த மாணவி!
பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள பாடசாலையின் மாணவி ஒருவர் அப்பாடசாலையின் ஆரம்ப பிரிவுக்கு செல்லும் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்ததில் படுகாயமடைந்து களுபோவில போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
க.பொ.த. சாதாரண தரத்தில் கல்வி பயிலும் 15 வயதுடைய மாணவியே இவ்வாறு கீழே குதித்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் முற்பகல் 10. 30 மணியளவில் பாடசாலை நேரத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் இந்த விவகாரம் தொடர்பில் பொலிஸ் தரப்பும் மாணவியின் தரப்பிலும் முன்னுக்கு பின் முரணான விடயங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
நேற்று முன்தினம் குறித்த மாணவி கல்வி கற்கும் வகுப்பில் 400 ரூபா காணாமல் போனதாக ஒரு முறைப்பாடு வகுப்பாசிரியரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன் போது குறித்த மாணவியே அந்தப் பணத்தினை எடுத்ததாக வகுப்புத் தலைவர் மற்றும் ஆசிரியர் ஆகியோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதனால் ஏனைய மாணவர்கள் குறித்த மாணவியை ஏளனம் செய்ததாகவும் அதனையடுத்தே மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ள குறித்த மாணவி பாடசாலை மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்ததாகவும் மாணவியின் தாயார் தெரிவித்தார்.
எனினும் பாடசாலை தரப்பு பொலிஸாருடன் சேர்ந்து விடயத்தை மறைத்து வேறு காரணங்களால் தனது மகள் தற்கொலைக்கு முனைந்ததாக உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.
இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடுகளைச் செய்துள்ளதாகவும் குறித்த மாணவியின் தாயார் தெரிவித்தார்.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் ஊடாக பம்பலப்பிட்டி பொலிஸாரை தொடர்பு கொண்டு சம்பவம் தொடர்பில் போது, குறித்த மாணவி மன உளைச்சல் காரணமாக தற்கொலைக்கு முயன்றுள்ளதாக தெரிய வந்துள்ளதாக பொலிஸார் எமக்கு பதிலளித்தனர்.
மன உளைச்சலுக்கான காரணத்தை நாம் வினவிய போது காதல் விவகாரமே பின்னணியில் உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
எனினும் இதனை முற்றாக மறுக்கும் குறித்த மாணவியின் தாயார், பொலிஸார் விடயத்தை திசை திருப்புவதாக கூறினார்.
அத்துடன் தனது மகளுக்கு பணம் தொடர்பில் எந்தச் சிக்கலும் இருக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சம்பவம் தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், ஒரு கால், ஒரு கை மற்றும் முதுகெலும்பு பகுதியில் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ள மாணவி தொடர்ந்தும் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


Comments
Post a Comment