ஓர் சமூகத்தின் தலைவன் குற்றவாளியாக …!!!
ஓர் சமூகத்தின் தலைவன் இன்று குற்றவாளியாக முத்திரை குத்தப்பட்டிருக்கின்றான். குற்றம் சுமத்தியவர் யாரோ ஒருவரல்ல. அதே தலைவரோடு பதினாறு வருடங்கள் தவிசாளராக வலம் வந்தவர். அவர் குற்றங்களை மட்டுமல்லாது அனைவரின் குற்றங்களையும் அம்பலப்படுத்துவேன் என்று அதட்டுகிறார். எங்கோ ஓர் தேனீர்க்கடையில் இருந்து கொண்டு பேசவில்லை, நாட்டின் தேசிய தொலைக்காட்சியில் தோன்றி, பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில்.
சுமத்தப்பட்ட குற்றங்கள் ஒன்றல்ல இரண்டல்ல பல. விபச்சாரம் புரிந்தவர் என்றும் அந்தக் குற்றத்திலிருந்து தவிர்ந்துகொள்எ எம் முழு முஸ்லீம் சமூகத்தையே ஓர் இனவாதியிடம் அடகு வைத்தவர் என்றும் பல்வேறு நேரங்களில் எம் சமூகத்தை கோடிகளுக்கு விற்றவர் என்று.
இவர் பொய் சொல்கிறார் என்று புறக்கணிப்பு செய்ய ரவூப் ஹக்கீம் ஒன்றும் முழு சுத்தமானவரும் அல்ல, இல்லை அவர் சொல்வது முற்றுமுழுதாக உண்மை என்று எண்ணுமளவுக்கு பஷீர் ஒன்றும் உத்தமரும் அல்ல. கூடிக்கொண்டு ஆடிய கூத்துக்கள் இன்று அவர்கள் ரெண்டுபட்டதால் சந்திக்கு வந்துவிட்டது.
ஆனால் மக்கள் எந்தவொரு ஆரவாரமும் இல்லாமல் அமைதி காப்பதால் கடந்த பதினாறு வருடங்களைப் போல் “இதுவும் கடந்து போகும்” நிலைதான் நமக்கு. உரிமைகளை வென்றுதர வேண்டிய கட்சி இன்று தேய்ந்து தேய்ந்து இனியும் ஒன்றுமில்லாமல் இன்று தலைவரின் படுக்கையறை வரைக்கும் வந்துவிட்டது.
இவர்கள் எம் வாக்குப்பிச்சைகளுக்கு எம்மிடம் அலைபவர்கள், நாம் வாக்களித்து அதிகாரம் வழங்கிவிட்டால் பின்னர் எம் உரிமைப் பிச்சைக்காக இவர்களின் பின்னால் அலையவேண்டிய துர்ப்பாக்கிய நிலை எமக்கு. எல்லாம் கடந்து போகும் என்று பொறுமை காத்த நாம் இன்னுமா பொறுமை காக்க வேண்டும்?
நாம் எம் தேசியத்தலைவர்களாக நம்பிவந்தோர் இன்று நம்மைக் கணக்கிலும் எடுக்காமல் நடுவீதியில் துயிலுரித்து விளையாடுகின்றனர்.
எதிரே உள்ள இனங்கள் எம் மீது காரித்துப்பும் அளவுக்கு நாற்றமடிக்கிறது எம் அரசியல். இனியுமா இவர்கள் எம் தலைவர்கள்?
நடுவீதியில் நிறுத்தி வைத்து இவர்களை நாம் கேள்வி கேட்கவேண்டும், கைகட்டி நின்றுகொண்டு அனைத்து குற்றங்களுக்கும் மக்களிடத்தில் மன்னிப்பு கேட்க செய்யவேண்டும். மொத்தமாக இவர்களை விரட்டவேண்டும் எம் முஸ்லீம் அரசியலிலிருந்து.
எம் மௌனமும் அமைதியும்தான் இந்த தலைமைத்துவங்களின் கேவலமான வழிகாட்டலுக்கு காரணம். இனியும் மௌனம் சாதித்தல் எம்மை முற்றுமுழுதாக தின்று தீர்க்க இவர்களுக்கு வழிகோலும். வீதிக்கு இறங்காதவரை விடுதலை இல்லை எம் மக்களுக்கு.
எத்தனை காலம்தான் இவர்களின் ஆட்டம்? இளைஞர்களே நாம் ஒன்றுபட்டாதவரை, கேள்வி கேட்காதவரை, அடித்து துரத்தாதவரை “இதுவும் கடந்து போகும்” என்று உச்சரித்தபடியே இருக்கவேண்டியதுதான்…

Comments
Post a Comment