தமிழில் தேசிய கீதத்தை பாட அனுமதிப்பதா.. அல்லது வாயை மூடி இருக்குமாறு கூறுவதா..
கேள்வியெழுப்பினார் பிரதமர் ரணில்
தமிழ் பிள்ளைகள் எமது தாயே என தேசிய கீதத்தை பாடியமை எந்தளவு முக்கியத்துவம் மிக்கது.
இந்நிலையில், தெரிந்த மொழியில் அவர்களுக்கு தேசிய கீதத்தை பாட அனுமதிப்பதா அல்லது வாயை மூடி இருக்குமாறு கூறுவதா? என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேள்வியெழுப்பினார்.
சுவாஷிலாந்து மற்றும் உகண்டா ஆகிய நாடுகளின் முறைமைகளை கைவிட்டு சிங்கப்பூர் முறைமைக்கு வந்ததையிட்டு முன்னாள் ஜனாதிபதிக்கு வாழ்த்து கூறுவேன். சிங்கப்பூரிலிருந்து வரும்போது மஹிந்த ராஜபக் ஷ எனது விமானத்தில் வந்திருந்தால் நிச்சயம் அதற்கான காரணத்தை கேட்டிருப்பேன். துரதிஷ்டவசமாக வர வில்லை. ஆனால் நிச்சயம் காரணத்தை பாராளுமன்றத்தில் கேட்பேன் எனவும் பிரதமர் தெரிவித்தார்.
கிராமிய பொருளாதார விவகார அமைச்சின் புதிய கட்டடத்தை நேற்று திங்கட்கிழமை திறந்து வைத்து உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
கிராமத்திலிருந்து வந்துள்ள அமைச்சர் பீ.ஹரிசனுக்கு கிராமியப் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் பொறுப்பை கையளித்துள்ளேன். கிராமியப் பொருளாதா நிலைகளிலிருந்து மக்கள் நகர பொருளாதாரத்தை நோக்கி நகர்கின்றனர். மத்திய கிழக்கு அல்லது இத்தாலி பொருளாதாரத்தை நோக்கியும் நகர்கின்றனர்.
இந்நிலையில் கிராமிய பொருளாதாரத்தை எவ்வாறு கட்டியெழுப்ப முடியும். எனவே தான் பீ.ஹரிசனிடம் அந்த பொறுப்பை கையளித்துள்ளோம்.
இந்த கட்டடத்திற்கு வருவதற்கு முன்னர் வடக்கு தெற்கு என அனைத்து பகுதிகளையும் அவதானிக்குமாறு கூறினேன். கடவுகளின் ஆசிர்வாதத்தை பெற்றுக்கொள்ளக் கூறினேன். தமிழ் மற்றும் வாஸ்து முறைகளையும் பாருங்கள். மேலும் மலேஷியா, இந்தோனேஷியா, வியட்னாம், சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தொடர்பிலும் அவதானிக்கப்பட வேண்டும். மீண்டும் அரிசி தொடர்பில் பிரச்சினை ஏற்படாத வாறு கட்டடத்தை அமைத்து செல்லுமாறு ஆலோசனை வழங்கினார்.
கிராமியப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் போது கால் நடைகள் துறையும் மிகவும் முக்கியமானதாகும். இத்துறைசார் உற்பத்திகளை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
பால் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். கிராமத்தில் பிள்ளைகளுக்கு 5 வருடங்கள் இலவசமாக பால் வழங்கப்பட வேண்டும். இதனை முன்வைத்து திட்டங்கள் முன்னெடுக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் கோழி உற்பத்தியில் ஏற்றுமதி பொருளாதார இலக்குகளை அடைவதற்கு திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதனை போன்று மேலும் கிராமிய பொருளாதாரத்தில் பல பிரிவுகளை அபிவித்தி செய்வதற்கும் அதனூடாக முன்னோக்கி செல்வதுமே எமது நோக்கமாகும்.
நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் புதிதாக சிந்திக்க வேண்டும். பல்லாயிரம் கோடி ரூபா கடனை மஹிந்த ராஜபக் ஷ எமக்கு விட்டுச் சென்றுள்ளார். அந்த கடனை 10 வருடங்களுக்குள் செலுத்தி முடிக்க வேண்டியதுள்ளது. தேசிய கடன் சுமை இரட்டிப்பாகும். எமது வருமானம் கடனை செலுத்த பயன்படுத்தப்படுகின்றது.எனவே புதிய வருமானத்துறைகளை கண்டறியப்பட வேண்டியுள்ளது. தொழில் வாய்ப்புகள், சர்வதேச முதலீடுகள் மற்றும் தேசிய முதலீடுகள் என்பன அத்தியாவசியமாகும்.
முன்னோக்கி செல்ல வேண்டும் என்றால் பொருளாதாரத்தில் போட்டி நிலை காணப்பட வேண்டும். அடிக்கடி சிங்கப்பூர் சென்று வருவதால் அங்கு என்ன கற்றுக் கொள்கின்றீர்கள் என பலரும் என்னிடம் கேட்பதுண்டு. ஆனால் எமது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ சுவாஸிலாந்து மற்றும் உகண்டா போன்ற நாடுகளில் இருந்தே கற்றுக் கொண்டார். பிரச்சினை இல்லை. எங்கும் கற்பதற்கு உரிமையுள்ளது.
அவுஸ்திரேலியா சென்று நாடு திரும்பும் போது சிங்கப்பூர் பிரதமருடன் இராப்போசனம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதன்போது சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சரும் சந்தித்தார். அப்போது சிங்கப்பூரில் இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ நாடு திரும்புவதாக இதன் போது தெரிவித்தார்.
ஒரே விமானத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நான் எதிர்பார்த்துக் காத்திருந்தேன். அவ்வாறு சந்தித்திருந்தால் சுவாஸிலாந்து மற்றும் உகண்டா ஆகிய நாடுகளின் முறைமைகளை கைவிட்டு சிங்கப்பூர் முறைமைக்கு வந்ததையிட்டு வாழ்த்து கூறியிருப்பேன். துரதிஷ்டவசமாக மஹிந்த ராஜபக் ஷ எமது விமானத்தில வரவில்லை. அடுத்த விமானத்திலேயே வந்தார். இதற்கான காரணத்தை பாராளுமன்றத்தில் நிச்சயம் கேட்பேன்.
புதிதாக சிந்திக்க வேண்டும். மஹிந்த புதிதாக சிந்திக்கின்றார் என்றால் நல்லது. ஒரு இடத்தில் சிக்கி முன்னோக்கி செல்ல முடியாது.
புதிதாக சிந்தித்தமையினால் சீனா மாற்றமடைந்தது. ஜப்பான், கொரியா, வியட்னாம், தாய்லாந்து, மலேஷியா, இந்தோனேஷியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் மாற்றமடைந்தன.பங்களாதேஷ் புதிய மாற்றத்தை நோக்கி செல்கின்றது.
இலங்கை ஏனைய நாடுகளை விட முதலாவதாக மாற்றத்தை நோக்கி நகர விரும்பியது. ஆனால் போர் முடிந்தும் ஒரு இடத்தில் சிறைப்பட்டு கிடந்தோம். இதற்கான காரணம் என்ன? நாம் முதலாவதாக தேசிய ஒற்றுமையை பாதுகாக்க வேண்டும்.
வேறு நாடுகளுக்கு செல்வதற்கு வாய்ப்புகள் இருந்தும் இலங்கை மீதுள்ள நேசத்தின் காரணமாக அவர்கள் இங்குள்ளனர். தமிழ் பிள்ளைகள் எமது தாயே என தேசிய கீதத்தை பாடியமை எந்தளவு முக்கியத்துவம் மிக்கது.
ஒரு தாய் பிள்ளைகள் என அடையாளப்படுத்துவது எந்தளவு சிறந்ததாகும். தெரிந்த மொழியில் அவர்களுக்கு தேசிய கீதத்தை பாட அனுமதிப்பதா அல்லது வாயை மூடி இருக்குமாறு கூறுவதா?
தமிழ் தெரிந்தவர்களுக்கு தமிழிலும் சிங்களம் தெரிந்தவர்களுக்கு சிங்களத்திலும் தேசிய கீதத்தை இசைக்க வாய்ப்பு அளித்துள்ளோம். இவ்வாறு தேசிய ஒற்றுமையை ஸ்தாபித்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என தெரிவித்தார்.


Comments
Post a Comment