சகல சவால்களையும் வெற்றிகொள்ளும் எதிர்கால திட்டங்கள் அரசின் கைவசம் : ஜனாதிபதி


நோயற்ற மக்களை உருவாக்கும் செயற்பணியில் மலேரியா, யானைக்கால் மற்றும் இளம்பிள்ளைவாதம் போன்ற நோய்களற்ற நாடாக சர்வதேச ரீதியில் நாம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் சுகாதாரத்துறையின் சகல சவால்களையும் வெற்றிகொள்ளும் எதிர்கால திட்டங்கள் அரசின் கைவசம் உள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

காலி கூட்டுறவு மருத்துவமனையின் புதிய இருதய அறுவை சிகிச்சைப் பிரிவினை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று கலந்துகொண்ட போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

குடியேற்றவாசிகளினால் ஏற்படும் சுகாதார சிக்கல்கள் தொடர்பாகவும் அரசு அவதானத்துடன் செயற்படுவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, நீண்டகாலமாகவே மக்கள் எதிர்நோக்கி வந்த பிரச்சினையான மருந்துகளின் விலையை கட்டுப்படுத்துவதற்காக மருந்துகள் சட்டத்தினை பாராளுமன்றத்தில் அங்கீகரித்து மருந்துகளின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்தமை சுகாதாரத்துறையில் தற்போதைய அரசு பெற்றுக்கொண்ட வெற்றியாகும் எனவும் குறிப்பிட்டார்.

டெங்கு நோயை இல்லாதொழிப்பதற்கான அரசின் பொறுப்புக்களை உயர்ந்த அளவில் நிறைவேற்றுவதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

Comments