வெளிநாட்டு நீதிபதிகளுக்கு அனுமதியில்லை : ஜனாதிபதி
போர் குற்றங்கள் பற்றிய விசாரணைகளுக்கு, வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மூன்று தசாப்த காலமாக இடம்பெற்ற போரின்போது இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களைப் பற்றி விசாரிப்பதற்கு உள்நாட்டு சட்ட திட்டங்கள் தெரிந்த நீதிபதிகளை கொண்ட, உள்ளக பொறிமுறையிலேயே விசாரணைகளை மேற்கொள்ள வலியுறுத்தி வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் புதிய நீதிமன்றக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசியுள்ள அவர், இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் வெளிநாட்டு நீதிபதிகளின் செயற்பாடுகளுக்கு இடமில்லை எனவும், வெளிநாடுகளை சேர்ந்த அரச தலைவர்கள், ஐநா செயலாளர்நாயகம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உயர்தணிகர் உள்ளிட்டோருக்கு குறித்த வெளிநாட்டு நீதிபதிகள், உள்நாட்டு போர் குற்ற விசாரணைக்கு தேவையில்லை என தாம் அறிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உள்நாட்டு நீதிபதிகளிடத்தில் உள்ள அனுபவம், அவர்களின் நுண்ணறிவு மற்றும் அரசாங்க நீதித்துறைகள் மீது தனக்கு அதிகளவான நம்பிக்கைகள் இருப்பதாகவும், அதனால் போர் குற்ற விசாரணைகள் குறித்து நடுநிலையான விசாரணைகளை உள்ளூர் நீதிபதிகளை கொண்டே மேற்கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment