பிறந்த குழந்தைக்கு தாய்ப் பால் கொடுத்தலின் முக்கியத்துவம்!


குழந்தை பிறந்த, ஒரு மணிநேரத்திற்குள் தாய்ப்பால் கொடுப்பதால், 22 சதவீதம் உயிரிழப்புகளை தடுக்கலாம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. குழந்தை வளர்ப்பின் ஆரம்ப நிலையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளே அவர்களது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் காரணியாக அமைகிறது. அவர்களது உடல்நலம், அறிவுத்திறன், உயரம், பள்ளி பருவ கால நடவடிக்கைகள், சம்பாதிக்கும் திறன், ஆளுமை திறன், பழக்க வழக்கம், வெற்றி, தோல்வி உள்ளிட்டவை குழந்தை வளர்ப்பு முறையை பொறுத்து அமைகிறது.

குழந்தையின் முதல் ஆயிரம் நாட்களில் மேற்கொள்ள வேண்டிய 21 காரணிகள் இதனை முழுமைபடுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து யுனிசெப் ஆலோசகர் தீபக் ராஜ் கூறியதாவது: குழந்தை வளர்ப்பு குறித்து யுனிசெப், உலக சுகாதார நிறுவனம் போன்றவை பல்வேறு ஆய்வுகள் நடத்தின. இதில், குழந்தைகள் வளர்ப்பில் முதல் 1,000 நாட்கள் முக்கியத்துவம் வாய்ந்தது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தாயின் வயிற்றில், கருவாக இருக்கும் 270 நாட்களும், பிறந்தபின் 2 வருடங்களும் இதில் அடங்கும். இந்த நாட்களில்  மேற்கொள்ள வேண்டிய 21 முக்கிய காரணிகள், ஆரோக்கியமான குழந்தை வளர்ப்பிற்கான அடையாளமாக கருதப்படுகிறது. இதில் முதல்படியாக, குழந்தை பிறந்த 1 மணிநேரத்திற்குள் கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இவ்வாறு கொடுக்கும் பட்சத்தில் 22 சதவீத குழந்தை இறப்பு தடுக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் 55 சதவீத தாய்மார்கள் மட்டுமே இதனை பின்பற்றி வருவது வேதனையான விஷயம்.

பிறந்ததில் இருந்து 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டும் வழங்கி வந்தால், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பை 15 சதவீதம் தடுக்கலாம். 7வது மாதத்தில் இருந்து ஊட்டச்சத்து உணவுகள் கட்டாயம் வழங்க வேண்டிய நிலையில், தமிழகத்தில் 64 சதவீதத்தினர் மட்டுமே இதனை பின்பற்றுகின்றனர். குழந்தை பிறந்து 28 நாட்களுக்குள் மருத்துவரின் முழு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

ரத்தசோகை நோய் பாதிப்பிலிருந்து தப்பிக்க ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் மாத்திரையை உட்கொள்வது அவசியம். இதன்மூலம் 20 சதவீத தாய்மார்கள் இறப்பு மற்றும் 24 சதவீத குழந்தை இறப்பை தடுக்கலாம். கருவளர்ச்சி காலத்தில் முறையான சிகிச்சை, பரிசோதனைகளை மேற்கொள்வது குழந்தையின் சீரான வளர்ச்சிக்கும், எடைகுறைந்த குழந்தை இறப்பை தடுக்கவும் உதவும். ‘வளைகாப்பு’ மூலம் கர்ப்பிணிகளுக்கு ஓய்வு, மனநிறைவு கிடைப்பதால் தவறாமல் அந்நிகழ்ச்சியை நடத்த வேண்டும்.

மருத்துவர்கள் கூறும் குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாகவே குழந்தை பெற்று கொள்ளும்போது, அக்குழந்தையின் இறப்பு 40 முறை உறுதிசெய்யப்படுகிறது. 45 சதவீத குழந்தை இறப்புகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் நிகழ்பவை. இந்த குறைபாட்டின் தொடர்ச்சி குழந்தையின் கல்வி மற்றும் அறிவுத்திறனையும் பாதிக்கிறது. குழந்தையின் முதல் பிறந்தநாளுக்குள் 5 தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும்.

இதனை 76 சதவீதத்தினர் மட்டுமே பின்பற்றி வருவதால், 7 சதவீத குழந்தை இறப்பு தடுக்க முடியாமல் போகிறது. நிமோனியா மற்றும் இருதய நோய்களை முன்னதாகவே கண்டறிந்து தடுப்பு சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். வருடத்திற்கு 2 முறையாவது விட்டமின் ஏ வழங்கியிருக்க வேண்டும்.

இதன்மூலம் 24 சதவீத குழந்தை இறப்பு தடுக்கப்படுகிறது. கழிவறைகளை பயன்படுத்துதல் (தற்போது 55 சதவீதத்தினர் மட்டும்), பாதுகாப்பான குடிநீர் (70 சதவீதம் பேர் மட்டும்), சாப்பிடும் முன்பும், மலம் கழித்தலுக்கு பின்பும் சோப்பு மூலம் கையை தூய்மைபடுத்த வேண்டும். இளம்பருவத்தினரின் உடல்நலம் பேணுதல், குழந்தை திருமணத்தை தடுத்தல், 18 வயது வரை பெண்கல்வி வழங்குதல் அவசியமாகும். முதல் ஆயிரம் நாட்களுக்கு குழந்தைகளிடம் பேசுவதுடன், பாடல்களை பாடுவது, புத்தகம் படித்து காண்பிப்பது ஆகியவற்றை தொடர வேண்டும். குழந்தைகளின் அறிவுத்திறனை மேம்படுத்த அயோடின் கலந்த உப்புகளை பயன்படுத்த வேண்டும். இந்த காரணிகள் குறித்த விழிப்புணர்வு ஒவ்வொரு பெற்றோருக்கும் அவசியம். இதனை அனைவரும் அறிந்து செயல்பட்டால், 5 வயதுக்குட்பட்ட குழந்தை இறப்பை நிச்சயம் தடுக்க முடியும்.

Comments