‘அழகிய தொனியில் அதான்’: நிந்தவூரில் பயிற்சி நெறி
‘அழகிய தொனியில் அதானை ஒலிக்கச் செய்வோம்’ எனும் இஸ்லாமிய சன்மார்க்க பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வு கடந்த 28ம் திகதி நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீ.ல.முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான றவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் இந்நிகழ்வில் சுகாதாரப் பிரதியமைச்சர் பைசால் காசீம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மது நஸீர், மாகாண சபை உறுப்பினர்களான கே.எம்.ஏ.றசாக், ஏ.எல்.தவம், நிந்தவூர் பாத்திமா பெண்கள் அரபுக் கல்லூரி அதிபர் சங்கைக்குரிய உலமா அல்ஹாபிழ் அலி அஹமத் றசாதி உள்ளிட்ட மார்க்க அறிஞர்கள் பலரும், பொது மக்களும் இதில் கலந்து கொண்டனர்.
‘அழகிய குரலில் அதானை (பாங்கோசையை) எவ்வாறு ஒலிக்கச் செய்வதென்ற ஆரம்பப் பயிற்சிகள் சங்கைக்குரிய உலமாக்களான ரசீட் மௌலவி, இஸ்ஸாக் மௌலவி ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டது.
பிரதியமைச்சர் பைசால் காசீம் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- ‘பேஸ் புக்கில் மற்றவர்களைக் குறை கூறி எழுதுபவர்கள், இவ்வாறான சமூக விடயங்களையும், சமூகத்தை எவ்வாறு முன்னுக்குக் கொண்டு செல்லலாம் போன்ற விடயங்களை எழுதுமாறு கேட்டுக் கொள்கின்றேன்’ எனத் தெரிவித்தார்.
-ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்


Comments
Post a Comment