மீண்டும் இன்று முதல் மூதூர் கல்வி வலயத்தில் ஆசிரியர்கள் சுகவீன லீவுப் போராட்டம்

(ihzana fareed)

சர்ச்சைக்குரிய மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூரை மூதூரை விட்டும் இடமாற்றம் செய்வதாக கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சின் செயலாளரால் மூதூர் வலய ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி ஒரு வாரகாலமாக நிறைவேற்றப்படாமையைக் கண்டித்து நாளை 21ம் திகதிமுதல் தொடர்ச்சியான சுகவீன லீவுப் போராட்டத்தில் ஈடுபடப் பொவதாக மூதூர் வலய ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நடவடிக்கைக் குழுவின் ஆசிரியர்களில் ஒருவரான எம்.ஏ.அனஸ் என்பவர் தெரிவிக்கையில்,

மூதூர் கல்வி வலயத்தைச் சேர்ந்த தோப்பூர், கிளிவெட்டி, ஈச்சிலம்பற்றை, சம்பூர், சேனையூர் உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் ஆசிரியர்கள் எவ்வித பேதமுமின்றி இச்சுகவீன லீவுப் போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாகவும், எம்மை அவமதிக்கும் வலயக்கல்விப் பணிப்பாளரை இங்கிருந்து இடமாற்றம் செய்யும் வரை இப்போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தார்.

மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் ஆசிரியர்களை அவமதிப்பதாகவும், மதநிந்தனையில் ஈடுபடுவதாகவும் தெரிவித்து கடந்த 13,14ம் திகதிகளில் மூதூர் வலயக்கல்வி அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டபோது கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சின் செயலாளர் ஆர்ப்பாட்டக்காரர்களோடு தொலைபேசியில் தொடர்புகொண்டு ஜனாப். மன்சூரை உடனடியாக இடமாற்றம் செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தார். இதேபோன்று ஜனாப். மன்சூரும் தாம் மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளர் பதவியிலிருந்து விலகிக் கொள்வதாகவும், தமது உதவியாளரான நௌசாத் எனும் உதவிக்கல்விப் பணிப்பாளரின் மூலம் ஆசிரியர்களுக்கு வாக்குறுதியளித்திருந்தார்.

இதேவேளை மூதூர் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) அதிபர் அங்குள்ள ஆசிரியர்களை மிரட்டி வலயக்கல்விப் பணிப்பாளருக்கு சாதகமாக ஒப்பம் வாங்குவதாகவும் வலயக்கல்விப் பணிப்பாளருக்கு சாதமகமாக ஒப்பமிடாவிட்டால் ஆசிரியர்களின் வருடாந்த சம்பள உயர்ச்சியை வழங்கமாட்டேன் எனவும், இடமாற்றம் செய்துவிடுவேன் என அச்சுறுத்துவதாகவும் ஜனாப். அனஸ் ஆசிரியர் தெரிவித்தார்.

Comments