02 மார்க்க குழுக்களிடையே வாள்வெட்டு: காத்தான்குடியில் சோகச் சம்பவம்


காத்தான்குடியில் நேற்று (10) இரவு இடம்பெற்ற இரண்டு குழுக்களுக்கிடையிலான மோதல் சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளதுடன், அதில் ஒருவர் படுகாயமடைந்தள்ளார்.

பிரச்சாரக் கூட்டமொன்று காத்தான்குடி ஆறாம் குறிச்சி அலியார் சந்தியில் நேற்று மாலை இடம் பெறவிருந்த நிலையிலேயே, இந்த மோதல் சம்பவம் இரு குழுக்களிடையே இடம்பெற்றுள்ளது.

இங்கு இடம் பெற்ற இந்த மோதல் சம்பவத்தில் வாள்வெட்டு மற்றும் கல் வீச்சு சம்பவங்களில் இரண்டு குழுக்களில் இருந்தும் மூவர் காயமடைந்துள்ளதாகவும், அதில் வாள்வெட்டுக்கு இலக்கான ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை அனுமிக்கப்பட்டுள்ளார். கல்வீச்சினால் காயமடைந்த ஒருவர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் மற்றொருவர் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளார்.

இந்த சம்பவத்தையடுத்து அங்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார் சம்பவத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் சம்பவ இடத்தில் பெருந்தொகையான பொலிஸார் குவிக்கப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி அத்தியட்சகர், காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட அதிகாரிகள் சென்று ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டதுடன் இருவர் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த இடத்தில் இடம்பெறவிருந்த மார்க்கப்பிரச்சாரக் கூட்டத்தை இடை நிறுத்துமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டதற்கிணங்க மார்க்கப்பிரச்சாரக் கூட்டம் இடை நிறுத்தப்பட்டது.

சம்பவம் தொடர்பில் குறித்த இடத்தில் சிலரின் வாக்குமூலங்களை பொலிஸார் பெற்றிருப்பதுடன் இது குறித்து தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Comments