வடக்கு, கிழக்கில் டெங்கு நோயின் தாக்கம் தீவிரம்!


வடக்கு, கிழக்கில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கில் பன்றிக்காய்ச்சல் காரணமாக, 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்றத்தில் நேற்றுத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,

“டெங்கு நோயின் தாக்கம் வடக்கு, கிழக்கில் அதிகரித்துள்ளது. குறிப்பாக, கிழக்கின் கின்னியா பிரதேசத்தில், டெங்கு நோயால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 15ஆம் திகதி முதல் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

மேலும், வடக்கில் உள்ள வைத்தியசாலைகளுக்கு வருவோரில் 90 சதவீதமான நோயாளர்கள், டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள்.

இதேவேளை, வடக்கில் பன்றிக்காய்சல் நோய் காரணமாக, இதுவரை 60பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் 10 பேர் சிறுவர்கள் ஆவர். மேலும், கர்ப்பிணி பெண்கள் மற்றும் சிறுவர்களே இந்த பன்றிக்காய்சல் நோயால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவில், 22 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டதுடன், குழுந்தைப் பெற்று இரண்டு வாரங்கள் ஆன பெண் ஒருவர், கடந்த 2ஆம் திகதி கெப்பற்றிபொலவில் உயிரிழந்துள்ளார்.

மேலும், வடக்கு வைத்தியசாலைகளுக்கு சுவாச நோய் காரணமாக, தினமும் 1000 நோயாளர்கள் வருகின்றனர். இந்த நோயினால் மட்டும், 20 ஆயிரம் பேர் வடக்கில் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 1000 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments