டெங்கு வைரசின் தாக்கத்தை எவ்வாறு உறுதிப்படுத்துவது/திருகோணமலை மாவட்டத்தை தாக்கியிருப்பது டெங்கா அல்லது வேறுவகை கிருமி தாக்கமா?
இக்காலத்தில் டெங்கு சம்பந்தமாக இலங்கையில் பலராலும் பரவலாக பேசப்பட்டு கொண்டிருக்கிறது.இதிலும் திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியாவில் இதுவரை 13 பேர் மரணம்,ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் பாதிப்பு,இன்னும் சிலர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்காக
போராடிக்கொண்டிருக்கிறார்கள்.மூதூரிலும் 400ற்கும் மேற்பட்ட டெங்கு தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தும் இறைவன் உதவியால் இதுவரை எவ்வித உயிரிழப்பும் இல்லை.திருகோணமலை நகர பகுதியிலும் இவ்வாரம் டெங்கின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.
பலரது பார்வை தற்போது கிண்ணியாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.பலர் நல்ல உள்ளத்துடன் உதவி செய்ய முன் வந்தாலும் இதிலும்/இந்நேரத்திலும் அரசியல் செய்பவர்களும் இல்லாமல் இல்லை.
இன்று பலரது சந்தேகம் திருகோணமலை மாவட்டத்தை குறிப்பாக கிண்ணியாவை தாக்கியிருப்பது டெங்கு வைரஸா? அல்லது வேறு ஏதாவது கிருமி தாக்கமா?
பொதுவாக காய்ச்சல் ஏற்பட்டு இரத்த பரிசோதனை(Full Blood Count) செய்கின்ற போது குருதி சிறுதட்டுக்களின் எண்ணிக்கை(Total Platelets) 150,000 வை விட குறைவதுடன் அனேகமாக மொத்த வெண்குருதி கலங்களின் அளவு(Total White Blood Cell) 4,000ஐ விட குறைகின்ற போது டெங்காக அடையாளப்படுத்தப்படுகிறது.இதையே மாற்றம் டெங்கு அல்லாத வேறு வைரஸாலும் ஏற்படலாம்.டெங்கினால் ஏற்படுத்தப்படுகின்ற நோய் அறிகுறிகள்(Symptoms),வைத்திய சோதனையின்போது வெளிக்கொணரப்படும் குனம் குறிகள்(Signs) என்பவற்றை வைத்து டெங்கு காய்ச்சலை சொல்ல முடியும்.
இருந்த போதும் டெங்கு காய்ச்சலை உறுதியாக சொல்வதற்கு
1)டெங்கிற்குறிய பிற பொருள் பரிசோதனை(Dengue Antigen Test)
2)டெங்கு பிற பொருள் எதிரி பரிசோதனை(Dengue Antibody Test)
போன்ற பரிசோதனைகளாகும்.இவை பெரும்பாலான வைத்தியசாலைகளில் இச்சோதனைகள் செய்வதற்குறிய போதிய வசதிகள் இல்லை.இது கொழும்பிலுள்ள மருத்துவ ஆராய்ச்சி நிலையம்(MRI-Medical Research Institute) மூலமும் இலவசமாக செய்ய முடியும்.இவை பெரும்பாலும் தனியார் பரிசோதனை கூடங்களிலே செய்யப்படுகிறது.இவை சற்று விலை உயர்ந்த பரிசோதனைகளாகும்.ஏறத்தாழ ஒவ்வொன்றும் 1300 தொடக்கம் 2000 ரூபா வரை செலவாகும்.
1)டெங்கிற்குறிய பிற பொருள் பரிசோதனை (Dengue Antigen Test)
------------------------------------
டெங்கு வைரஸ் தாக்கியவுடன் டெங்கிற்குறிய பிறபொருள் NS1 இரத்ததில் காணப்படும்.அறிகுறிகள் ஏற்பட்டு முதல் இரண்டு நாள்களில் இச்சோதனை செய்கின்ற போது இதன் வினைத்திறன்(Sensitivity)மிக கூடுதலாக
இருக்கும்.ஆரம்பத்தில் டெங்குதான் என அறியப்படுமிடத்து மிகவும் அவதானமாக இருப்பதோடு இதற்குறிய முறையான சிகிச்சை பெற்று கொள்வதன் மூலம் இறப்பு வீதத்தை(Mortality Rate) மிகவும் குறைக்க முடியும்.
கல்வி அறிவில் நமது நாடு முன்னேறியதாக இருந்தாலும் பல நோயாளிகளால் முறையான நோய் அறிகுறிகள் சம்பந்தப்பட்ட தகவல்களை சொல்வதில்லை(Proper History).வைத்தியரிடம் நோய்க்குறிய மாறுபட்ட Historyஐ சொல்வதன் மூலம் இப்பரிசோதனையானது உரிய நேரத்தில் செய்யப்படாதவிடுத்து உண்மையான டெங்கு தாக்கம் இருந்தும் இதனுடைய பெறுபேறு சில வேலை டெங்கு இல்லையென்று காட்டலாம்.
2)டெங்கு பிறபொருள் எதிரி பரிசோதனை(Dengue Antibody Test)
--------------------------------------
டெங்கு வைரஸ் நான்கு வகையாக அவற்றின் பிறபொருள் அடிப்படையில் பிரிக்கப்படும்.ஒருதடவை ஒரு வகையான பிற பொருளால் தாக்கம் ஏற்படுத்தப்படும் போது அதற்கு எதிராக மனிதனில் நிர்ப்பீடன தொகுதியால்(Immuneo System)உருவாக்கப்படும்
பிறபொருளெதிரிகள்(Antibodies) வாழ் நாள் பூராகவும் அவனது இரத்திலே இருக்கும்.இது இதன்பிறகு இவ்வகை டெங்கிற்கு எதிராக வாழ் நாள் பூராகவும் தாக்குதல் நடத்தும்.எனவே ஒரு மனிதனின் அவனது வாழ்க்கை காலத்தில்(Life time)ஆகக்கூடுதலாக நான்கு தடவைகள் டெங்கு தாக்கத்திற்கு உள்ளாகலாம்.
டெங்கு தாக்கி முதலாவது வாரத்தின் மூன்றாவது,நான்காவது நாற்களிள் முதன்மையான பிறபொருளெதிரி(IgM) இரத்ததில் அதிகரிக்க தொடங்கும்.இரண்டாவது வார முடிவில் இதன் அளவு குறைய தொடங்கும்.
இது போல டெங்கிற்குறிய நிரந்தர பிறபொருளெதிரி(IgG) முதலாவது வாரத்தின் மூன்றாவது,நான்காவது நாற்களில் தொடங்கி வாழ் நாள் பூராகவும் இரத்திலே இருக்கும்.எனவே இப்போது நீங்கள் சுகதேகியாக இருந்தாலும் இப்பரிசோதனை செய்யும்போது உங்கள் வாழ்நாளில் எப்போதாவது டெங்கு ஏற்பட்டுள்ளதா? என்பதை அறிய முடியும்.
தறபோது கிண்ணியா அரச,அரச சார்பற்ற பல்வேறு உதவிகள் கிடைத்து கொண்டிருக்கிறது.இது வரவேற்கத்தக்க விடயம்.இருந்த போதும் இவை சிரமதானம் போன்ற குறிப்பிட்ட சிலவற்றிற்கு பயன்படுத்தாது இவ்வகையான பரிசோதனைகளை செய்ய பயன்படுத்தப்படும் போது
**இக்கிருமி டெங்கா அல்லது வேறு கிருமியா என்பதை உறுதிப்படுத்தலாம்.
**டெங்கு நோயை ஆரம்பத்தில் கண்டுபிடிப்பதன் மூலம் முறையான சிகிச்சையினால் இறப்பு வீதத்தை குறைக்கலாம்.
** குறித்த முடிவின் அடிப்படையில் எந்த பிரதேசத்தில் கூடுதலான தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை அடையாளப்படுத்தி அவ்விடங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மேலதிக ஏற்பாடுகளை செய்ய முடியும்.
***மேற்படி பரிசோதனைகளை புள்ளிவிபரங்களாக உரியவர்களிடம் சமர்ப்பிக்கப்படுமிடத்து எதிர்காலத்தில் டெங்கு அதி தீவிர சிகிச்சை பிரிவு(Dengue High Dependent Unit)
நிச்சயம் திருகோணமலை மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு கிடைக்கும்.
எனவே சுயநலம்,பெருமை,புகழின்றி ஒற்றுமையுடன் அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக நிகழ் காலம்,எதிர்காலத்தை கருத்திற் கொண்டு செயல்படுவோம்.
நன்றி
Dr. A.H. Subiyan
MBBS(SL),Diploma in Psychology (SL)
General Scope Physician
Doha-Qatar.


Comments
Post a Comment