வில்பத்து வன பிரகடனம் வாபஸ் பெறப்படுமா?
ஜனாதிபதி செயலகத்தில் இன்று அவசர கூட்டம்
வில்பத்து சரணாலயத்துக்கு வடக்கே அமைந்துள்ள நான்கு பாதுகாக்கப்பட்ட வனங்களை பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலை சிவில் சமூக அமைப்புகள் இரத்துச் செய்யுமாறு கோரியதையடுத்தும், அப்பிரதேச மக்கள் போராட்டங்களை நடத்தியதையடுத்தும் ஜனாதிபதி இன்று சிவில் சமூக பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலொன்றை ஏற்பாடு செய்துள்ளார்.
இதற்கென ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் கமிட்டியொன்றினையும் நியமித்துள்ளதுடன் கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும் கலந்து கொள்ளவுள்ளார்.
நேற்று ஜனாதிபதி, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி ஆகியோருடன் இவ்விவகாரம் தொடர்பில் கலந்துரையாடினார்.
ஜனாதிபதி இன்று சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலொன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளதையடுத்து கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்படமாட்டாதெனவும் ஜனாதிபதியிடம் நேரில் கையளிக்கத் தீர்மானிக்கப்பட்டிருந்த மகஜர் கையளிக்கப்படமாட்டாதெனவும் நேற்று மாலை கொழும்பு ரமதா ஹோட்டலில் நடைபெற்ற சிவில் சமூக அமைப்புகளின் ஊடக மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.
இன்று நடைபெறவுள்ள கலந்துரையாடலில் சுமுகமான தீர்வு எட்டப்படாவிட்டால் நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டது.
ஊடக மாநாட்டில் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நான்கு பிரதேசங்களை உள்ளடக்கி வன பிரதேசமாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டமையை அறிந்து நாம் அதிர்ச்சியடைந்தோம். மக்களுக்கு கால அவகாசம் வழங்காமல் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியுடன் இவ்விகாரம் தொடர்பில் நானும் அமைச்சர் ரிஷாதும் கலந்துரையாடினோம். இந்தப் பிரகடனத்தில் எந்தவோர் பள்ளிவாசலும் பாடசாலையும் மக்கள் வாழ்விடங்களோ உள்வாங்கப்படமாட்டாது எனத் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஜனாதிபதி செயலகம் அறிக்கையொன்றினையும் வெளியிட்டுள்ளது.
நாளை (இன்று) இவ்விவகாரம் தொடர்பில் எமக்கு சாதகமான தீர்வுகள் கிடைக்காவிட்டால் நாம் போராட்டங்களை நடத்துவோம். ஜனாதிபதி இந்த வன பிரதேசங்கள் தொடர்பாக ஆணைக்குழுவொன்றினை நியமித்து விசாரணை செய்த பின்பே தீர்மானங்கள் மேற்கொள்ள வேண்டும்.
ஜனாதிபதியும் பிரதமரும் இவ்விகாரத்துக்கு சுமுகமான தீர்வு பெற்றுத் தருவதாகக் கூறியுள்ளார்கள். ஜனாதிபதியின் செயலாளர் போராட்டங்களை நிறுத்தும்படியும் சுமுகத் தீர்வுகளை கலந்துரையாடல் மூலம் எட்டலாம் எனவும் தெரிவித்திருக்கிறார்.
ஜனாதிபதி நாமல்கம குடியேற்ற வன பிரதேசத்துக்கு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடாது தவிர்த்து முஸ்லிம்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த பிரதேசங்களையே வன பிரதேசமாக பிரகடனப்படுத்தியுள்ளார்.
முஸ்லிம்கள் தமக்குப் பாதுகாப்பும் உரிமைகளும் கிடைக்கும் என்பதற்காகவே ஜனாதிபதியைத் தெரிவு செய்தார்கள் என்றார்.
புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன பேசுகையில்;
பாதுகாக்கப்பட்ட வன பிரதேச பிரகடனத்தை அறிவிப்புச் செய்வதற்கு இனவாதிகளே ஜனாதிபதியை வழி நடத்தியிருக்கிறார்கள். முன்பு பௌத்த இனவாதக் குழுக்கள் வில்பத்து வன பிரதேசத்தை முஸ்லிம்கள் ஆக்கிரமித்துள்ளதாக ஜனாதிபதியிடம் முறையிட்டபோது முஸ்லிம்கள் ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிப்பு செய்யவில்லை என உறுதியாகக் கூறிய ஜனாதிபதி இன்று பிரகடனம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளமை வேடிக்கையாக இருக்கிறது. இவ்விடயத்தில் ஜனாதிபதி தவறிழைத்திருக்கிறார்.
விடுதலைப் புலிகளினால் விரட்டப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் பலாத்காரமாக குடியேறவில்லை. அரசாங்க அதிகாரிகள் அப்பிரதேசத்தில் சூழல் மாசுபடுமா, வன பிரதேசம் அழிவுக்குள்ளாகுமா என்று ஆராய்ந்து பார்த்ததன் பின்பே மக்களை மீள் குடியேற்றியிருக்கிறார்கள்.
ஜனாதிபதி, தான் எடுக்கும் எந்த தீர்மானத்தையும் பிரதமருடன் கலந்தாலோசித்து பின்பு அமைச்சரவையில் ஆலோசித்தே மேற்கொள்வதாக ஆரம்பத்தில் கூறியிருந்தார். அப்படியென்றால் வனப்பிரதேச பிரகடனம் தொடர்பில் பிரதமரும், அமைச்சரவையிலும் கலந்துரையாடினாரா என்பதை அவர் நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
இவ்விவகாரத்தில் ஜனநாயகம், நீதி நிலை நிறுத்தப்பட வேண்டும். இல்லையேல் அனைவரும் ஒன்றுபட்டு இதற்கு எதிராக போராடுவதுடன் இவ்விவகாரத்தை சர்வதேசத்துக்கும் கொண்டு செல்ல வேண்டும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவர் என்.எம்.அமீன் உரையாற்றுகையில்;
2012 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் 15 ஆயிரம் ஹெக்டேயருக்கு 2017 ஆம் ஆண்டு 40 ஆயிரம் ஹெக்டேயரும் வனப்பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இது மக்களின் பூர்வீக வாழ்விடங்களை உள்ளடக்கிய பிரதேசங்களாகும். இது தொடர்பில் ஜனாதிபதி மீள் பரிசீலனை செய்ய வேண்டும். 2012, 2017 ஆம் ஆண்டுகளின் வர்த்தமானி அறிவித்தல் இரத்துச்செய்யப்பட வேண்டும். இப்பிரதேசம் மீள் குடியேற்றம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என்றார்.
நிகழ்வில் தேசிய சூரா சபை, வை.எம்.எம்.ஏ, மலைநாட்டு சிவில் சமூகம், ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில், ஆர்.ஆர்.ரி அமைப்பு உட்பட பல அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸிலின் உப தலைவர் ஹில்மி அஹமட், ஆர்.ஆர்.ரி அமைப்பின் செயலாளர் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப், ஸ்ரீமஸ்ரீ ஹப்பு ஆரச்சி ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.


Comments
Post a Comment