டெங்கு நோய் விழிப்புணர்வு – சிறப்புக் கட்டுரை
இன்று இலங்கை மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடூரமான ஆட்கொள்ளி நோயான டெங்குக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. நாடு பூராகவும் பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள் என்று எல்லாத் தரப்பு மக்களும் பரவலாக பாதிக்கப்பட்டு வருவதைக் கண்கூடாக கண்டு வருகிறோம்.
டெங்கு தொடர்பான விழிப்புணர்வைப் பெற்றுக் கொள்ள டெங்குக் காய்ச்சல் தொடர்பான சில தகவல்களை அறிந்து கொள்வோம்.
டெங்குக் காய்ச்சலுக்கான நோய்க் காரணி.
வைரசு வகையைச் சேர்ந்த ஆர்போ வைரசு (Arbo Virus) எனும் நுண்ணங்கியாகும். டெங்குக் காய்ச்சலுக்கான நோய்க் காவி
ஈடிஸ் எனும் நுளம்பு வகையைச் சேர்ந்த ஈடிஸ் அல்போபிக்டஸ் (Aedes albopictus) ஈடிஸ் ஈஜிப்டி (Aedes aegypti) போன்ற நுளம்பு வகைகளாகும். இவ் வகை நுளம்புகளை அடையாளம் காணக்கூடிய சிறப்பம்சமாக கரு நிறக் கால்களில் வெள்ளை வரிகள் காணப்படும்.
நுளம்பு மனிதனைக் கடிக்கும் நேரங்கள்.
இவை பொதுவாக பகலிலேயே மனிதர்களைக் கடிக்கின்றன. பொதுவாக விடியற்காலையிலும் பிற்பகலிலும் இந் நுளம்புகள் கடிக்கின்றன.
நுளம்புகளின் பெருக்கம்.
தேங்கி நிற்கும் சுத்தமான நீரில் டெங்கு நுளம்புகள் முட்டையிடுகின்றன. உதாரணமாக குறும்பை மட்டைகள், யோகட் கோப்பைகள், டயர்கள், பூச்சாடிகள், வடிகான்கள் போன்றவற்றில் நீர் தேங்கி நிற்கும் போது அதில் முட்டைகளை இடுகின்றன.
ஆரம்ப வரலாறு.
டெங்கு காய்ச்சல் நோய் ஒன்று முதன் முதலில் சீன மருத்துவ அறிகுறிகள் என்சைகிளோபீடியாவில் சீன பேரரசுக் காலத்தில் (265 – 420 கி.பி) பதிவு செய்யப்பட்டுள்ளது. பறக்கும் பூச்சிகளுடன் தொடர்புடைய நீர் நச்சுமையால் இது ஏற்பட்டுள்ளதாக அங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.
டெங்குவாக கருதக்கூடிய காய்ச்சலுடன் கூடிய பரந்த தொற்று நிகழ்வு ஒன்று முதன்முதலில் 1635 இல் மேற்கிந்தியத் தீவுகளில் நடந்ததாகப் பதியப்பட்டுள்ளது.
1779-1780 ஆண்டுப் பகுதியில் முதலாவது டெங்கு என உறுதிப்படுத்தப்பட்ட தொற்று நிகழ்வு ஆசியா, வட அமெரிக்கா, ஆபிரிக்கா போன்ற பகுதிகளில் ஏறத்தாழ ஒரே நேரத்தில் நிகழ்ந்தது. 1789 இல் அமெரிக்க மருத்துவர் பெஞ்சமின் ரஷ் 1780 ஆம் ஆண்டு பிலாடெல்பியாவில் நிகழ்ந்திருக்கக்கூடிய டெங்கு தொற்று நிகழ்வு பற்றிக் குறிப்பிட்டுள்ளார், இவர் அதன் அறிகுறிகளை வைத்து ‘எலும்பு முறிப்பு நோய்’ என்று பெயரிட்டார்.
1820 இன் முற்பகுதிகளில் கிழக்கு ஆப்பிரிக்காவில் டெங்குவாக இருக்கக்கூடிய தொற்று நிகழ்வு நிகழ்ந்தது. இதனை சுவாகிலி மொழியில் கெட்ட ஆவியால் திடீரென உண்டாகும் எனப் பொருள்படும் ‘கி டெங்கா பெபோ’ (ki denga pepo) என்று அழைத்தனர். 1827-28 இல் கரிபியனில் நிகழ்ந்த தொற்று நிகழ்வின் பின்னர் இசுப்பானிய கரிபியர்களால் டெங்கு என அழைக்கப்பட்டது. 1906 இல் ஏடிசு நுளம்பினால் இது காவப்படுகின்றது என்பது அறியப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் பின்னர் பெரும்படியான தொற்று நிகழ்வுகள் நிகழ்ந்தன
நோயின் தன்மை.
ஒரு தடவை நுளம்பு கடிப்பதே நோய் உண்டாவதற்கு வழிகோலும். நோயுள்ள ஒருவரைக் கடித்த உடனேயே நோயற்றவரை நுளம்பு கடிக்குமாயின் நுண்ணங்கிகள் பரவக்கூடும். இதைவிட, பெண் நுளம்பு தனது குருதி உணவை நோய் தொற்றியுள்ளவரிடம் இருந்து பெற்ற பின்னர், நுளம்பின் குடற்கலங்களை நுண்ணங்கிகள் அடைகின்றன. 8 – 10 நாட்கள் கழிந்து நுளம்பின் ஏனைய இழையங்களுக்குள் நுண்ணங்கிகள் பரவுகின்றன, இவ்வகையில் உமிழ்நீர்ச் சுரப்பியையும் அவை சென்றடைகின்றன. நோயில்லாத ஒருவரை இந் நுளம்புகள் கடிக்கும் போது நுண்ணங்கிகள் செறிந்த தமது உமிழ்நீரை அவருக்குள் செலுத்துகின்றன, இதன் மூலம் அவரும் தொற்றுக்கு உள்ளாகின்றார். எனவே நுளம்பானது உடனேயோ அல்லது 8-10 நாட்கள் சென்ற பின்னரோ நோய்க் காவியாகத் தொழிற்படுகின்றது.
நோயின் பாரதூரம்.
குழந்தைகளிலும் சிறுவர்களிலும் கடுமையான நோய் உண்டாகின்றது. ஆண்களைக் காட்டிலும் கூடுதலாக பெண்கள் பாதிப்படைகின்றனர். நீரிழிவு, ஆஸ்துமா நோய் போன்ற நீண்டகால நோய்கள் உள்ளவருக்கு இந்நோய் மிகவும் உக்கிரம் அடையும் போது உயிருக்கு தீங்குவிளைவிக்கக் கூடிய பாதிப்பை உண்டாக்கும்.
நோயின் அறிகுறி.
நோயின் பருவங்களை மூன்றாகப் பிரிக்கலாம்:
1.காய்ச்சல்,
2. கடுமையான பருவம்,
3. மீள்நிலைப் பருவம்.
நோயரும்பு காலப் பகுதியை அடுத்து, முக்கிய அறிகுறியான காய்ச்சல் உடனே தோன்றி மிகையாகும். உடல் வெப்பநிலை 40 °C (104 °F) க்கு மேற்செல்லும், இதனுடன் கடுமையான தலைவலி, குறிப்பாக கண்களின் பிற்புறத்தே வலி தோன்றும். பொதுவாக காய்ச்சல் இரண்டு தொடக்கம் ஏழு நாட்களுக்கு நீடிக்கும். வெகு அரிதாக ஆனால் சிறார்களில் பொதுவாக, இக் காய்ச்சல் 2 – 5 நாட்களுக்கு நீடித்து, பின்னர் ஓரிரு நாட்களுக்கு இராது, மீண்டும் காய்ச்சல் ஓரிரு நாட்களுக்குத் தோன்றும், பின்னர் அறவே நிற்கும். பத்து நாட்களுக்கு மேலே காய்ச்சல் நீடித்தால் அது டெங்குக் காய்ச்சலாக இருக்கும் சாத்தியக்கூறுகள் குறைவு. இப்பருவத்திலே ஏனைய அறிகுறிகள் காணப்படும். அவையாவன:
• தலைவலி
• கண் பின்புற வலி
• பொதுவான உடல் வலி (தசை வலி, மூட்டு வலி)
• குமட்டலும் வாந்தியும்
• வயிற்றுக் கடுப்பு
• தோல் சினைப்பு: அடி முட்டிகளில் பொதுவாகவும், சிலருக்கு உடல் முழுதுமே அரிப்பு ஏற்படலாம்
• பசியின்மை
• தொண்டைப் புண்
• மிதமான குருதிப்போக்கு (பல் ஈறுகளில் இருந்து குருதி வடிதல், மூக்கில் இருந்து குருதி வடிதல், மாதவிடாய் மிகைப்பு, சிறுநீரில் குருதி போதல்,
• நிண நீர்க் கணு வீக்கம்
• வெள்ளை அணுக்கள், குருதிச் சிறுதட்டுக்கள் குறைதல்
காய்ச்சல் தொடங்கும் காலப்பகுதியில் தோல் நமைச்சல், சினைப்பு தோன்றக்கூடும். முதல் அல்லது இரண்டாம் நாள் (காய்ச்சல் மற்றும் மற்றைய அறிகுறிகள் தோன்றியதில் இருந்து) தோலின் சில பகுதிகள் சிவப்பு நிறமாக மாறும். அடுத்த 4-7 நாட்களில் சின்னமுத்து நோயில் உண்டாகும் சினைப்பைப் போன்று சிறிய சிறிய சிவப்பாலான புள்ளிகள் போன்ற தோற்றம் பெறும். முதலில் உடலிலும் பின்னர் முகத்திலும் நமைச்சல் தோன்றும். இந்நிலையில் குருதி நுண் குழாயில் (குருதி மயிர்த்துளைக்குழாய்) கசிவு ஏற்பட்டு வாய், மூக்கு போன்ற பகுதிகளில் சிறியளவிலான குருதிப்போக்கு உண்டாகாலாம்.
சிலருக்கு இந்நோய் கடுமையான பருவத்தைக் கொண்டிருக்கும். காய்ச்சல் முடிவடைந்த பின்னர் ஏற்படும் இப்பருவம் ஓரிரு நாட்கள் நீடிக்கும். இப்பருவத்தில் உடலில் நீர்மத்தேக்கம் ஏற்படும். குருதி நுண் குழாயின் ஊடுபுகவிடும் தன்மை அதிகரித்து கசிவு ஏற்படலால் நெஞ்சறை, வயிற்றுப் பகுதிகளில் நீர்மத்தேக்கம் உண்டாகின்றது. இதனால் சுவாசச் சிக்கல், வயிறு புடைத்தல் ஏற்படும். இப்பருவத்தில் உறுப்புகள் செயலிழப்பு, கடும் குருதிப்போக்கு என்பன ஏற்படும். சிகிச்சை அளிக்கப்படாத நிலையில் இது அடுத்த கட்ட நிலையான டெங்கு அதிர்ச்சிக் கூட்டறிகுறிக்குச் செல்லும்.
அடுத்ததாக மெதுவாக நிகழும் மீள்நிலைப் பருவம், இதில் குருதிக்குழாய்க்கு வெளியே கசிந்த நீர்மம் குருதிக் குழாய்க்குள் இழுக்கப்பட்டு குருதியை அடையும். இது இரண்டு, மூன்று நாட்களுக்கு நீடிக்கும். இந்நிலையின் போது நமைச்சல், தாழ் இதயத் துடிப்பு போன்றன காணப்படலாம், மேலும் நீர்ம அதிகரிப்பு இந்நிலையில் ஏற்பட்டால் மூளையைப் பாதித்து சுயநினைவு இழத்தல், வலிப்பு போன்றவற்றை உண்டாக்கலாம். நோயின் பின்விளைவுகளில் கல்லீரல் பாதிப்பு ஏற்படலாம். இது டெங்கு கல்லீரல் அழற்சி எனப்படும்.
சிகிச்சை பலனில்லாது போனால் மரணம் சம்பவிக்கும்!
தடுப்பு முறைகள்.
டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் நுண்ணங்கியில் நான்கு குருதிப்பாய வகைகள் உண்டு எனவே ஒருத்தருக்கு நான்கு முறைகள் இக்காய்ச்சல் வரக்கூடும். இதனால் டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசி முறை இன்னமும் ஆய்வில் உள்ளது. தடுப்பூசி இல்லாத காரணத்தால் டெங்கு நோயைப் பரப்பும் நுளம்பிலிருந்து பாதுகாத்துக் கொள்வதே இன்றியமையாத தடுப்பு முறையாகும்.
நுளம்பு உருவாகாமல் தடுப்பதற்கு சுற்றுப் புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்தல், அவற்றின் வதிவிடத்தை முற்று முழுதாக அழித்தல், வதிவிடத்தில் இனம்பெருகாது கட்டுப்படுத்தல் என்பன முக்கியமானது. சுற்றுப்புறத்தில் தேங்கும் நீர் நிலைகளைக் கண்டறிந்து அவற்றை வெறுமைப் படுத்துதல் அல்லது நீர் தேங்கி உள்ள அத்தகைய இடங்களில் பூச்சிகொல்லி மருந்துகளைத் தெளித்தல், உயிரியற் கட்டுப்பாட்டுக் காரணிகளை இடல் போன்றன நுளம்புகளின் பெருக்கத்தைத் தடுக்கின்றது. பூச்சிகொல்லி மருந்துகளால் மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கருதுமிடத்து தேங்கிய நீர்நிலைகளை வெறுமைப் படுத்தும் முறையே சாலச்சிறந்தது. தோலை மூடக்கூடிய உரிய ஆடைகள் அணிவது, தூங்கும்போது நுளம்பு வலை உபயோகிப்பது, நுளம்புச் சுருள் போன்றவற்றை பயன்படுத்தல் என்பன நுளம்பு கடிக்காமல் பாதுகாத்துக் கொள்ள உதவும்.
டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழி டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை அழிப்பதாகும். எனவே தனி மனிதனோ அல்லது சமூகமோ டெங்கு பெருகும் வண்ணம் சூழலை அசுத்தப்படுத்துவது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். சட்டத்தின் மூலம் இதனை சாதித்து விட முடியாது. இறையச்சத்தின் மூலமும் சமூக அக்கறையின் மூலமுமே இதனை சாதிக்கலாம்.
எனவே நாம் செய்ய வேண்டியது என்ன ?
v டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய வகையில் நீர் தேங்கி நிற்கக் கூடிய பொருட்களை சூழலுக்கு சேர்க்காதிருப்போம்.
v தென்னம் குறும்பை, யோகட் கப், வெற்று போத்தல்கள், வெற்று டயர்கள், பொலிதீன் கழிவுகள் போன்ற கழிவுகளை முறையாக அகற்றுவோம்.
v ஒரு வாரத்துக்கு ஒரு தடவையாவது சுற்றுப் புறச் சூழலை கண்கானிப்போம்.
v வீதிகளிலோ, பொது இடங்களிலோ பிறர் மூலம் சேர்க்கப்பட்ட டெங்கு நுளம்பு பெருகும் பொருட்களை நாமாக முன்வந்து அப்புறப்படுத்த வேண்டும்.
டெங்கு நுள்ம்புகளை உணவாக உட்கொள்ளக் கூடிய தவளைகளை கொல்லக் கூடாது.
தவளைகளால் எப்படிப்பட்ட நன்மைகள் விளைகின்றன என்பதை அப்போதுள்ள மக்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் தற்போது நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது. இதுபோல நுளம்புகள் அதிகமாக உற்பத்தி ஆவதற்கு காரணம் தவளைகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்ததுதான் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்டுபிடித்துள்ளனர். தவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் நுளம்புகள் அதிகமாக பெருகிவருகிறது. தவளைகள் அதிகமாக இருந்தால் தண்ணீரில் மிதக்கும் நுளம்புகளின் (இளமைப் பருவமான)லார்வாக்களை அவை சாப்பிட்டுவிடும். அண்மையில் டெல்லியில் நடத்திய ஆய்வில் இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் தவளைகளே இல்லை என்று தெரியவந்துள்ளது. இதனால், தவளைகளை காப்பாற்ற வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
- பாடசாலைகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தளங்கள் போன்ற இடங்களில் – மக்கள் சங்கமிக்கும் இடங்களில் – பிரச்சாரம், கருத்தரங்குகள், துண்டுப் பிரசுரங்கள் போன்ற முறைகளைப் பயன்படுத்தி டெங்கு ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
- டெங்கு நோயின் விபரீதத்தை மக்களுக்கு தெரியப்படுத்தல்.
- சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்திருப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்துதல்.
- சிரமதான வேலைத் திட்டங்களை கிராமங்கள் தோறும், தெருக்கள் தோறும் ஏற்பாடு செய்தலும் அதனை வலியுறுத்தலும்.






Comments
Post a Comment