காத்தான்குடி: பொது இடங்களில் மார்க்கப் பிரசாரங்களுக்கு தடை
அமைதிக்கும் சமாதானத்திற்கும் குந்தகம் ஏற்படுத்தும் வகையில் காத்தான்குடி பிரதேசத்தில் பொது இடங்களில் மற்றும் வீதியோரங்களில் மார்க்கப் பிரசாரக் கூட்டங்களை நடத்துவதற்கு தடை விதிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடியில் கடந்த வெள்ளிக்கிழமை இரண்டு குழுக்களுக்கிடையில் நடைபெற்ற மோதல் சம்பவத்தையடுத்து அது தொடர்பாக ஆராயும் விஷேட மாநாடு ஒன்று நேற்று புதன்கிழமை காத்தான்குடி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மிலின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.பி.வெதகெதர மற்றும் காத்தான்குடி நகர சபை செயலாளர் எஸ்.எம்.ஸபி மற்றும் உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர் மற்றும் காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபை பிரதிநிதிகள், காத்தான்குடி பள்ளிவாசல்களின் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதிநிதிகள், காத்தான்குடி வர்த்தக சங்க பிரதிநிதிகள், கிராம உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது காத்தான்குடியில் கடந்த (10) வெள்ளிக்கிழமையன்று இரண்டு குழுக்களுக்கிடையில் நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக ஆராயப்பட்டன.
இந்த மாநாட்டின் இறுதியில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில் காத்தான்குடியில் அமைதிக்கும் சமாதானத்திற்கும் குந்தகம் ஏற்படுத்தும் வகையில் காத்தான்குடி பிரதேசததில் பொது இடங்களில் மற்றும் வீதியோரங்களில் மார்க்கப்பிரசாரக் கூட்டங்களை நடாத்துவதற்கு தடை விதிப்பதெனவும் மற்றும் அதான் சொல்லுதல், பொது அறிவித்தல்கள் வாசித்தல், இரு பெருநாட்கள் ஆகியவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து விடயங்கள் மற்றும் வைபவங்களின் போதும் வெளி ஒலிபெருக்கி பாவிப்பதை முற்றாக தடை செய்தல் என இதன் போது ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த (10) வெள்ளிக்கிழமை காத்தான்குடியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காத்தான்குடியிலுள்ள இரண்டு சிறிய குழுக்களே சம்பந்தப்பட்டுள்ளன.
இந்த இரண்டு சிறிய குழுக்களின் மோதல் சம்பவத்தினால் காத்தான்குடியை வெளிப்பிரதேசங்களிலும் மற்றும் சர்வதேச ரீதியாகவும் கேவலப்படுத்துவதற்கு சிலர் முற்சி செய்கின்றனர்.
இந்த சம்பவங்களுக்கும் காத்தான்குடி மக்களுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது எனவும் இதில் காத்தான்குடியையும் காத்தான்குடியிலுள்ள பெரும்பான்மையான மக்களையும் கேவலப்படுத்தி காட்ட வேண்டாமெனவும் இதில் கலந்து கொண்ட பிரமுகர்களினால் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.


Comments
Post a Comment