கோத்தாவை ஜனாதிபதியாக தெரிவுசெய்யவேண்டும் : தயான் ஜயதிலக்க
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவை ஜனாதிபதியாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை பிரதமராகவும் அடுத்த தேர்தலில் தெரிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று இராஜதந்திரி தயான் ஜயதிலக்க தெரிவித்தார்.
இலங்கை அரசியலின் அடுத்த கட்ட பயணம் தொடர்பில் அவர் விபரிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
இலங்கையின் அரசியலில் இப்போதைய நகர்வுகள் மிகவும் மந்தமாக உள்ளன. நாம் பயணிக்கும் பயணம் நாட்டின் பாதுகாப்பு, நாட்டின் பொருளாதாரம் மற்றும் தனி நபர் வருமானம் ஆகிய அனைத்திலும் மோசமான தாக்கத்தை வெளிப்படுத்தும். ஆகவே மீண்டும் மாற்றம் ஒன்றை உருவாக்க வேண்டும். அதற்கு மக்களின் ஒத்துழைப்பும் தூரநோக்கு சிந்தனையும் அவசியமாகும்.
இப்போது நிராகரிக்கப்பட்டுள்ள தன்மைகளை கொண்டே மீண்டும் ஆட்சியை அமைக்க வேண்டும். இதில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவை ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும். அதேபோல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை பிரதமாராக நியமிக்க வேண்டும். இந்த கூட்டணியே இலங்கைக்கு ஏற்றதும் பொருத்தமானதுமான அரசியல் பயணத்தை உருவாக்க முடியும்.
மேலும் இப்போதைய தலைமைத்துவத்தை நாட்டிற்கு பொருத்தமான ஒன்றாக கருத முடியாதுள்ளது. இந்த தலைமைத்துவம் மக்களின் பூரண அங்கீகாரம் இல்லாது ஆட்சிக்கு வந்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் வெற்றியில் ஏனைய அனைவரும் தமக்கான அதிகாரங்களை தக்கவைத்துக்கொண்டுள்ளனர். ஆனால் மக்களின் பூரண அங்கீகாரம் இவர்களுக்கு இல்லை. அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சியினாலும் தனித்த ஆட்சியை இனிமேல் கைப்பற்ற முடியாது. மக்கள் இன்று ஆட்சியாளர்கள் மீதான நம்பிக்கையை இழந்துள்ளனர்.
எதிர்வரும் 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவினால் போட்டியிட முடியாது. ஆகவே ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ரணில் விக்கிரம சிங்கவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவும் போட்டியிடும் நிலையில் மக்களின் ஏகமனதான தெரிவு கோத்தபாய ராஜபக் ஷவாகவே இருக்கும் என்றார்.


Comments
Post a Comment