முகநூல் தொடர்பிலும் உலமா சபையிடம் பெண்கள் அமைப்பு கோரிக்கை
நாட்டிலுள்ள அரபுக் கல்லூரிகள் மற்றும் அரபு மத்ரஸாக்களின் பாடத்திட்டத்தில் முஸ்லிம் தனியார் சட்டத்தையும் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படியும் பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு இச்சட்டம் தொடர்பான தெளிவூட்டல்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கும் படியும் முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகம் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் பிரதிநிதிகளை முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தின் பிரதிநிதிகள் உலமா சபையின் தலைமைக் காரியாலயத்தில் சந்தித்து கலந்துரையாடியதன் பின்பு இக்கோரிக்கையை எழுத்து மூலம் முன்வைத்தனர். முஸ்லிம் தனியார் சட்டத்தில் 15 திருத்தங்களுக்கான பரிந்துரைகளையும் அவர்கள் முன்வைத்தனர்.
முஸ்லிம் பெண்கள் நம்பிக்கையகம் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையிடம் முன்வைத்துள்ள மேலும் கோரிக்கைகளாவன: காதிநீதிமன்றங்களில் பெண்கள் பாதிக்கப்படுவதிலிருந்தும் தவிர்ப்பதற்காக பெண்களும் காதிநீதிபதிகளாக நியமிக்கப்படவேண்டும்.
காதிமேன்முறையீட்டுச் சபையின் கீழ் காதிகள் ஆலோசனைச் சபை ஒன்று இயங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் அது தற்போது இயங்காமலுள்ளது.
அந்த ஆலோசனை சபையை இயங்கச் செய்வதுடன் அதில் அங்கம் பெறும் ஐவரில் ஒரு பெண் அங்கத்தவரும் நியமிக்கப்பட வேண்டும். தகுந்த காரணங்களின்றி கணவனினால் தலாக் செய்யப்படும் பெண்களுக்கும் கணவனின் கொடுமைகள் காரணமாக பஸஹ் செய்து கொள்ளும் பெண்களுக்கும் மத்தாஹ் (நஷ்டஈடு) வழங்கப்படவேண்டும்.
இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ள பலதார மணத்தை நாங்கள் எதிர்க்கவில்லை.
ஆனால் பலதார மண அனுமதி நிபந்தனைகளின் அடிப்படையிலேயே வழங்கப்பட வேண்டும். காதி நீதிமன்றங்களினால் நீதிவான் நீதிமன்றுக்கும் மாவட்ட நீதிமன்றுக்கும் அனுப்பி வைக்கப்படும் தாபரிப்பு மற்றும் கைக்கூலி கொடுப்பனவுகள் தொடர்பான வலியுறுத்தல் கட்டளைகளின் சட்ட நடவடிக்கைகளின் போது ஏற்படும் பிரச்சினைகள் தவிர்க்கப்பட வேண்டும்.
பல பள்ளிவாசல்கள், வக்பு சபையில் பதிவு செய்யப்படாதுள்ளன. இவ்வாறான பள்ளிவாசல்கள் முஸ்லிம் தனியார் சட்ட விவகாரங்களில் தலையிட்டு சில நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றன. மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன. இவ்வாறான பள்ளிவாசல்கள் வக்பு சபையில் பதிவு செய்யப்படாதிருப்பதினால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க முடியாதுள்ளது. எனவே பள்ளிவாசல்கள் வக்பு சபையில் பதிவு செய்யப்பட வேண்டும்.
முஸ்லிம் பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் முஸ்லிம் பெண்களின் படங்கள் முகநூல்களில் வெளியிடப்பட்டு கொச்சைபடுத்தப்படுகின்றன.
அவ்வாறான முகநூல்களுக்கு எதிராக உலமா சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முஸ்லிம் அரசியல்வாதிகளில் அநேகர் ஷரீஆ சட்டம் மற்றும் முஸ்லிம் தனியார் சட்டம் என்பன தொடர்பில் அறிவற்றவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சிப்பட்டறைகள் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
கலந்துரையாடலில் முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தின் பணிப்பாளர் ஜூவைரியா மொஹிதீன் தலைமையில் பிரதிநிதிகளும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாறக் தலைமையில் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.


Comments
Post a Comment